பாபநாசத்தில் இருந்து அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி வழியாக நெல்லை செல்லும் பிரதான சாலை உள்ளது.  இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களும், பொதுமக்களும் பயணம் செய்கின்றனர். இந்த சூழலில் இந்த சாலையில் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளானது 132.06 கோடி மதிப்பீட்டில் கடந்த மார்ச் 2021 ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது இப்பணிகளானது கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். குண்டும் குழியுமான சாலைகளை கடந்து செல்ல 3 மணி நேரத்திற்கும் மேல் ஆவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். குறிப்பாக அவசர சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் செல்லும் நோயாளிகளும் மிகுந்த வேதனையை அனுபவித்து வருகின்றனர் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்தனர். எனவே பல கிலோ மீட்டர் தொலைவு வரை பாதியில் நிறுத்தப்பட்டிருக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்து வந்தனர்.




இந்த சூழலில் கிடப்பில் கிடக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, இதனை கண்டித்து அம்பாசமுத்திரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தலைமையில் சேரன்மகாதேவியில் இன்று உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதற்கிடையில் திட்டமிட்டபடி இன்று போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர். அதன்படி எம்எல்ஏ இசக்கி சுப்பையா மற்றும் நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா உட்பட அதிமுக தொண்டர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அங்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் பாதுகாப்பில் ஈடுபட்ட காவல்துறையினர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் அவர்கள் தரையில் அமர்ந்து கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா மற்றும் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உட்பட அதிமுகவினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.




இது ஒரு புறமிருக்க உண்ணாவிரத போராட்ட அறிவிப்பு போஸ்டர்களும் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்த போஸ்டருக்கு பதில் போஸ்டராக அதற்கு மேலாகவே அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையாவிற்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக உங்க நாடகத்தை நிறுத்துங்க எம்எல்ஏ, சென்னையில் செட்டில் ஆன எம்எல்ஏ உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களை என்றைக்காவது நினைத்து பார்த்ததுண்டா... அம்பாசமுத்திரம் சாலை பணிகளை கடந்த ஆட்சியில் அதிமுக கட்சிக்காரருக்கு கொடுத்து 3 ஆண்டுகளாக அதனை சரிசெய்யாத உங்கள் கட்சிக்காரரை கண்டிக்காமல் தொடர்ந்து மக்களை திசை திருப்பும் நாடகங்களை உடனே நிறுத்துங்கள். இனியும் நம்ப தயாராக இல்லாத சேரன்மகாதேவி ஊர் பொதுமக்கள் என குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர்களும் தற்போது சமூக வலைதலங்களில் பரவி வருகிறது..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண