தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது. மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுகவின் பிரம்ம சக்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.




தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடத்தப்பட்டது. 17 உறுப்பினர்களை கொண்ட மாவட்ட ஊராட்சியில் அதிமுக 12 வார்டு உறுப்பினர்களையும், திமுக 5 வார்டு உறுப்பினர்களையும் பெற்றது. தொடர்ந்து நடந்த மாவட்ட ஊராட்சி தலைவர், தூணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் அதிமுகவை சேர்ந்த 5-வது வார்டு உறுப்பினர் சத்யா தலைவராகவும், 10-வது வார்டு உறுப்பினர் செல்வக்குமார் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.




இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து துணைத் தலைவர் செல்வகுமார் திமுகவில் இணைந்தார். மேலும் சில உறுப்பினர்களும் திமுகவில் இணைந்தனர். இதையடுத்து துணைத் தலைவர் செல்வகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து புதிய துணை தலைவராக திமுகவைச் சேர்ந்த 8-வது வார்டு உறுப்பினர் சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டார்.


மேலும் அதிமுகவை சேர்ந்த தலைவர் சத்யாவுக்கு எதிராக உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்தத் தீர்மானம் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி வெற்றி பெற்றது. இதையடுத்து தலைவர் பதவியில் இருந்து சத்தியா நீக்கப்பட்டு, தலைவர் பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நவம்பர் 8-ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.




அதன்படி தலைவர் தேர்தலுக்கான மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி செயலாளர் நாகராஜன் முன்னிலை வைத்தார். கூட்டத்தில் 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தலைவர் பதவிக்கு திமுகவை சேர்ந்த 15-வது வார்டு உறுப்பினர் பிரம்மசக்தி மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தொடர்ந்து அவருக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா மற்றும் உறுப்பினர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.




மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான திமுகவினர் கூடியிருந்தனர். பிரம்மசக்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் மேளதாளம் முழங்கியும், பட்டாசு வெடித்தும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்வு செய்யப்பட்ட பிரம்மசக்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்துக்கு சென்று அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரம்மசக்தி திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளரும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளருமான உமரிசங்கரின் மனைவியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.




தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட உமரிக்காட்டை சேர்ந்த உமரிசங்கர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவுடன் தனது மனைவி பிரம்மசக்தியை மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக்கியதன் மூலம் அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் திமுக சார்பில் உமரிசங்கர் போட்டியிடுவாரோ என உள்ளூர் உடன்பிறப்புகள் பரப்பரப்பா பேசுக்கிறாங்க, தற்போது ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏவாக உள்ளார். இவர் காங்கிரஸை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.உமரிசங்கரின் உடன்பிறந்த சகோதரர் கோட்டாளமுத்து ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இவருக்காக ஸ்ரீவைகுண்டம் தொகுதி மூன்றாக பிரிக்கப்பட்டு அதில் கிழக்கு ஒன்றியத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் தான் கோட்டாளமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.