கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி அப்துல்காதர் மருத்துவமனை அருகில் கடந்த 5ஆம் தேதி பைக்குகள் மோதி நடந்த விபத்து ஒன்றில், வெள்ளாடிச்சிவிளையை சேர்ந்த நிஷாந்த் என்பவர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், விபத்தில் சிக்கிய தன்னை இடலாக்குடியை சேர்ந்த சிலர் தாக்கினர் என கூறினார்.  இந்த புகாரின் பேரில், கோட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து இடலாக்குடியை சேர்ந்த சபீக் (40) என்பவரை கைது செய்தனர். 



 

போலீசார் முறையாக விசாரிக்காமல் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார்கள் என கூறினர். இதையடுத்து சபீக்கை உடனடியாக விடுவிக்க கோரி கடந்த 6 ஆம் தேதி, நாகர்கோவில் கேப் ரோட்டில் இடலாக்குடி சந்திப்பில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் கன்னியாகுமரி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், டி.எஸ்.பி. நவீன்குமார் மற்றும் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். 



 

இந்த போராட்டத்தால் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் மறியலில் பங்கேற்றவர்கள் என சுமார் 100 பேர் மீது, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 143, 341, 269, 270 மற்றும் தொற்று பரவல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.