திருநெல்வேலி அருகே நடந்த சாலை விபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




 


திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே இந்த விபத்தானது நடைபெற்றுள்ளது. சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய நிலையில , அது தொடர்பான வேலை நிமித்தமாக திருவனந்தபுரம் சென்று விட்டு நெல்லைக்கு காரில் திரும்பி கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ளது.


இதில் தனியார் தொலைக்காட்சியின் நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளர் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் காரில் பயணித்த நெல்லை மாவட்ட செய்தியாளர் நாகராஜ், மற்றொரு தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் வள்ளிநாயகம், ஆகியோர் காயங்களுடன் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 




இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கார் ஓட்டி வந்தது சங்கர்தான் என்றும், செய்தியாளர் நாகராஜன், ஒளிப்பதிவாளர்கள் நாராயண மூர்த்தி, வள்ளிநாயகம் ஆகியோர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர். கார் விபத்தில் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் உயிரிழந்தது ஊடக உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கர் மறைவுக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.