மதுரை மாவட்டம் வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி காவலரை மிரட்டிய பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் அய்யனார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வழக்கு
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள வி.சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் என்பவரது மகன் பிரபாகரன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கோவிலாங்குளத்தைச் சேர்ந்த அழகேந்திரன் என்ற பட்டியலின இளைஞர் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறி சத்திரப்பட்டி கண்மாய் கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் பிரபாகரன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சரித்திர பதிவேடு குற்றவாளியான பிரபாகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றில் பிரபாகரன் ஆஜராகாத நிலையில், திண்டுக்கல் காவல்துறையினர் நேரடியாக பிரபாகரனின் வீட்டிற்கு சென்று பிரபாகரனை தேடிய போது இல்லாத நிலையில் பிரபாகரனின் தந்தை முத்துவேலை அழைத்துச் சென்றுள்ளனர்.
காவல் நிலையத்தின் கதவை மூடிவிட்டு தப்பியோடியுள்ளனர்
இந்த நிலையில் வீட்டிற்கு வந்த பிரபாகரன் தனது தந்தையை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக கூறியதை கேட்டு ஆந்திரமடைந்துள்ளார். இதையடுத்து, தனது நண்பரான அய்யனாரை அழைத்தபடி சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் நள்ளிரவில் முகத்தில் துணியை முகமடி போல அணிந்தவாறு சென்று, காவலர் பால்பாண்டியை தாக்க முயன்றதோடு காவல் நிலையத்தில் உள்ள கம்ப்யூட்டர், மேஜை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கியதோடு காவல் நிலையத்தின் கதவை மூடிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
தமிழக முழுவதிலும் பெரும் பரபரப்பையும் சர்ச்சையும், ஏற்படுத்தியது
இந்த விவகாரம் தொடர்பாக சத்திரப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மதுரையில் வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நள்ளிரவில் கொலை குற்ற வழக்கில் தொடர்புடைய நபர், காவல் நிலையத்திற்குள் புகுந்து காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி, காவலருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் தமிழக முழுவதிலும் பெரும் பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தியது.
பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் கை, கால் முறிவு
இந்நிலையில் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி காவலருக்கு மிரட்டல் விட்டு சென்ற பிரபாகரன் மற்றும் அய்யனார் ஆகிய இருவரும் T.கல்லுப்பட்டி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட நல்லியதேவன்பட்டி செல்லும் சாலையின் அருகே பதுங்கி இருந்தனர். அப்போது தனிப்படையினர் அவரை பிடிக்க ஓடியபோது அவர் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்து அருகில் இருந்த பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் அவருடைய வலது கை மற்றும் இடது காலில் முறிவு ஏற்பட்டது. இதடையடுத்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமணையில் பிரபாகரன் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பிரபாகரனுடன் சேர்ந்து V.சத்திரப்பட்டி காவல் நிலையத்தை நொறுக்கிய V.வெங்கடஜலபுரத்தை சேர்ந்த அய்யனார் என்பவரை T.கல்லுப்பட்டி விருதுநகர் ரோட்டில் உள்ள V.சத்திரப்பட்டி சந்திப்பில் கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.