பொதுக்கூட்டம்:


நாளை (28 ஆம் தேதி) நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பெல் மைதானத்தில் நடக்கும் பாரதிய ஜனதா கட்சி பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் மாநகர பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. பிரமாண்ட மேடை அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் வந்து இறங்கும் பிரதமர் அங்கிருந்து கார் மூலம் சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள பொதுக்கூட்டம் மைதானத்திற்கு சென்றடைகிறார். அங்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். சுமார் 1 மணி நேரம் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு முதல் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைப்பதோடு தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரிக்கிறார்.


பாதுகாப்பு ஏற்பாடு:


இதற்காக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த நிலையில் முதல் முறையாக பிரதமர் நெல்லை மாநகர பகுதிக்கு வருகை தருவதையொட்டி மாநகர் பகுதி முழுவதும் போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது மாநகரப் பகுதிகளின் எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது. கனரக வாகனங்கள் பிரதமர் பொதுக்கூட்டம் நடைபெறும் சாலையில் அனுமதிக்கப்படவில்லை. மேலும் தனியார் தங்கும் விடுதிகள் தனியார் தங்கும் குடியிருப்புகள் உள்ளிட்டவைகளும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட மைதானம் மற்றும் ஹெலிகாப்டர் இறங்கு தளம் ஆகிய இடங்களில் பிரதமரின் தனிப்பிரிவு பாதுகாப்பு படையினரின் தீவிர கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மாநகர் பகுதி முழுவதும் பிரதமர் வந்து செல்லும் நாள் வரை ட்ரோன் கேமராக்கள் பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


போக்குவரத்து மாற்றம்:


பிரதமர் நாளை வரவுள்ள நிலையில் 28ஆம் தேதி காலை முதல் மதியம் வரை சமாதானபுரத்தில் இருந்து கே டி சி நகர் சாலையில் இரு மார்க்கங்களிலும் போக்குவரத்து தடை செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில்   தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுக்கூட்டம் மைதானத்திற்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு விஎம் சத்திரம் பிஎஸ்என்எல் அலுவலகம் பின்புறமும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்திலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


காவல்துறை அறிவிப்பு:


இதற்காக காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 28 ஆம் தேதி பிரதமர் வருகையை முன்னிட்டு வாகன தணிக்கை, தங்கும் விடுதிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஹெலிபேட் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் காவல்துறை அதிகாரிகளின் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் இலகுரக வாகனங்களை பயன்படுத்துபவர்கள் எந்தவித இடையூறுமின்றி அந்த பாதையை பயன்படுத்தலாம், கனரக வாகனங்கள் 28  ஆம் தேதி மட்டும் மாநகர எல்லைக்குள் வராத வகையில் புறவழிச்சாலையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள், நீதிமன்றம், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்களுக்கு எவ்வித போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அனைவரும் அவர்களுடைய வாகனங்களை அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்த வேண்டும். 


வாகனங்களை நிறுத்தும் இடம்: 


1. சாந்தி நகர் காவலர் குடியிருப்பு அருகில் கார்த்திக் தியேட்டர் மைதானம் அலுவலகம் ( பிஎஸ் என் எல் அலுவலகம் பின்பகுதி)


2. மருத்துவக்கல்லூரி பின்பகுதி


3. இதயம் கல்யாண மண்டபம் அருகில் ( முக்கியஸ்தர்களுக்கு மட்டும்)