நடிகர் பிரசாந்த் தனது நற்பணி மன்றம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறார். சமீபத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை நேரில் சென்று செய்தார். இந்த வரிசையில் நெல்லை மற்றும் தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று தனது நற்பணி மன்றம் மூலமாக வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்படி நெல்லை பாளையங்கோட்டையில் 50 வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரசாந்த் கூறும்போது, “அதிகமான சாலை விபத்துக்கள் நடக்கின்றன, அதில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது, அதற்கு முக்கிய காரணம் ஹெல்மட் அணியாதது தான் என்று சொல்லப்படுகிறது, அதனால் தலைக்கவசம் முக்கியம். பொதுமக்களுக்கும் அந்த உணர்வு இருக்க வேண்டும் என்கின்றனர். இதனால் அவர்களுக்கு அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த பணியை செய்து கொண்டு இருக்கிறேன். என்னால் எவ்வளவு தூரம் மக்களுக்கு எடுத்துரைக்க முடியுமோ எடுத்துரைத்து  அவர்களுக்கு ஹெல்மட்டும் வழங்கி வருகிறேன். இதனால் ஒருவருடைய உயிர் காக்கப்பட்டால் கூட எனக்கு சந்தோஷம் தான், அதில் எனது மன்றமும், மன்றம் சார்ந்தவர்களும் இந்த பணியில் இறங்கி உள்ளோம்” என்றார். 




இதனை தொடர்ந்து பேசும்போது, ”அந்தகன் திரைப்படம் முடிந்துவிட்டது. விரைவில் வெளியிடுவதற்கான பணிகள் போய்க்கொண்டு இருக்கிறது, அடுத்ததாக விஜய் அவர்களுடன் சேர்ந்து  நடித்துக் கொண்டு இருக்கிறேன். தளபதியுடன் நடிக்கும் அந்த திரைப்படம் எதிர்பார்ப்புகளை விட சிறப்பாக அமையும்” என்றார். தொடர்ந்து விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்த கேள்விக்கு, அவரது வாழ்த்துகள். மக்களுக்கு சேவை செய்யும் பணி நிஜமாகவே கடினமான பணி.  நிறைய கமிட்மெண்ட். அது விஜய் சாரிடம் உள்ளது. அதற்கு அவருக்கு பாராட்டுகள். எனக்கு அது கடினம், அதற்கு தைரியம் வேணும், இறங்கியிருக்கிறார், அவருக்கு என் வாழ்த்துகள் என்றார்.


நீங்கள் அரசியலில் களம் இறங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதா  என்ற கேள்விக்கு?  நான் நிறைய விசயங்கள் ரொம்ப நாளாக மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறேன், என்னை பொறுத்தவரை நான் நடிகன் தான், நடித்துக் கொண்டு இருக்கிறேன். என் மூலமாக  மக்களுக்கு ஏதாவது செய்ய முடிஞ்சா அதை செய்ய நான் தயங்கியதில்லை, ரொம்ப சந்தோசமாக இருக்கும். மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு நான் திரும்ப கைம்மாறாக என்ன செய்ய முடியும் என்பதற்கு இது போன்ற பணிகளை செய்து வருகிறேன் என்றார். அரசியலுக்கு நோக்கம் இல்லை என்கிறீர்களா என்ற  கேள்விக்கு அப்படின்னா என்னங்க என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். விஜய் உடன் சூட்டிங் ஸ்பாட்டில் அரசியல் குறித்து பேசுவது உண்டா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு?  நீங்கள் இரண்டு நண்பர்கள் பேசும் பொழுது அதை வெளியே சொன்னால் எப்படி இருக்கும்? நல்லா இருக்குமா? என்றார். இறுதியாக உங்கள் இளமையின் ரகசியம் என்ன என்று கேட்டதற்கு, எங்க  அப்பா அம்மா கொடுத்த ஜீன்ஸ்தான். கடவுளின் ஆசிர்வாதம், ரசிகர்களின் அன்பு, அப்பா அம்மா பெரியவர்கள் ஆசிர்வாதம் தான் வேறு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.