நெல்லை பாளையங்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ஆம் தேதி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் கூறும் பொழுது, வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடி பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். 


மீனவர்களுக்கு எல்லா விதத்திலும் இடையூறாக இருக்கும் பிஜேபி அரசை கண்டிக்கிறோம். கடந்த  10 ஆண்டுகளில் 400 விசைப்படகுகளை பிடித்திருக்கிறார்கள். 3800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். இதையெல்லாம் பாரா முகமாக இருக்கும் மோடி அரசை கண்டித்தும்,  ஜிஎஸ்டி 20 ஆயிரம் கோடி தரவில்லை, வெள்ள நிவாரணம் அதிகம் பாதிக்கப்பட்ட நெல்லை தூத்துக்குடிக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிவாரணம் அளிக்கவில்லை. இதையெல்லாம் கண்டித்து  வருகிற 28 ஆம் தேதி சமாதானபுரம் மின்வாரிய அலுவலகத்தில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் தேசிய மீனவர் அணி தலைவர் ஆம்ஸ்ட்ராங் ரொனால்டோ முன்னிலையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, மீனவர் மீது மோடி காட்டும் அலட்சியப்போக்கை கண்டித்து மிகப்பெரிய அளவில் கண்டன கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மோடியின் அரசு மீனவர்களை வஞ்சிக்கிறது. அவர்கள் மீது எந்த வித அக்கறையும் இல்லாத இரண்டாம் பட்ச குடிமக்களாகவே கருதுகின்றனர். 


நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கென தனித்துறை இலாக்காவை அமைப்போம் என்று சொன்னார்கள். அதையெல்லாம் விடுத்து  மீனவர்களை வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து  28 ஆம் தேதி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர் என்று தெரிவித்தார். பிரதமர் ஹெலிகாப்டரில் இறங்கும் பகுதிக்கு அருகே உள்ள சமாதானபுரம் மின்வாரிய அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.