நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ராஜகோபால சுவாமி கோவில். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி பிரமோற்சவத்தில் உத்திர நாளில் ரதவீதிகளில் தேர் சுற்றி வர கோலகமாக தேர்திருவிழா நடைபெறும். ஆனால் இக்கோவிலின் கோயிலின் தேர் பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது.


குறிப்பாக, கடந்த 8 வருடங்களாக பங்குனி பிரம்மோஸ்தவத்தில் தேர் ஓடவில்லை. இதையடுத்து பக்தர்கள் புதிய தேர் செய்ய முடிவு செய்தனர். இதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு பூர்வாங்க பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு ரூ 54 லட்சம் மதிப்பில் 36 அடி உயரம், 14 அடி அகலம், 35 டன் எடை கொண்ட புதிய மரத்தேர் செய்யப்பட்டது.  5 அடுக்கு வேலைப்பாடுகளுடன் திருத்தோ் பணி முடிவடைந்தது.  இந்த நிலையில் வருகிற பங்குனி பிரமோற்சவத்தில் தேர் வலம் வரும் வகையில் தோ் வெள்ளோட்டமானது இன்று நடைபெற்றது.




இதற்காக நேற்று மாலை மகா சங்கல்பம் விஷ்வக்ஷேன ஆராதனை, கும்ப ஸ்தாபனம்  கலச திருவாராதனம் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. இன்று அதிகாலையில் திருக்கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப பூஜை முடிந்ததும் ஹோமங்கள் தொடா்ந்து மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.  திருவோண நட்சத்திரமும், அமிர்தயோகமும் கூடிய மேஷ லக்னத்தில் காலை 9.47 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து வெள்ளோட்டம் தொடங்கியது.  முன்னதாக யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று தேர் ஆவாஹனம் மற்றும்  திருவாராதனம் நடைபெற்றது. ஆன்மீகப் பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு ராஜகோபாலன் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். 




இத்தேர் விஷ்ணுவுக்கு உரிய ரத லட்சணங்களுடன்  அமைக்கப்பட்டுள்ளதோடு, 12 ஆழ்வார்களின் சிற்பங்கள், தசாவதார சிற்பங்கள், கண்ணன் லீலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 5 தட்டு அடுக்கு,  அழகிய மர சிற்ப வேலைப்பாடுகள் உடன் அலங்காரம் செய்யப்பட்ட 36 அடி உயர தேர், அதன் 35 டன் எடையால் ராஜகோபால சுவாமி கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் ஆடி அசைந்து வந்த வெள்ளோட்ட காட்சியில் ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.


நான்கு ரத வீதிகளிலும் மக்கள் கூட்டம் சூழ தேர் ஆடி அசைந்து வந்த அழகை ரசித்து வணங்கினர். கடந்த 8 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாததால், சாலைகளில் ஓங்கி வளர்ந்திருந்த மர கிளைகள் அனைத்தும் வெட்டப்பட்டு தேர் தடையின்றி ஓடும் வகையில் மின் வாரியம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அதற்கான பணிகளை சிறப்பாக செய்திருந்தார்கள். தேர் வெள்ளோட்டம் முடிந்ததும் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது.  இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கோபாலன் கைங்கர்யசபா மற்றும் திருக்கோயில் நிர்வாகத்தினா் சிறப்பாக செய்திருந்தனா்.