தமிழகத்தில் சிலம்பம் பற்றிய முதலாவது வரலாற்று ஆதாரமாக ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி தொன்மங்களில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய சிலம்பக்கலையில் பயன்படும் குறுவாள்கள், குத்துமுனைகள் போன்றவை அவ்வாராய்ச்சியில் கிடைத்தமை மூலம் சிலம்பக்கலை ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன்னரே பூரணமான ஒரு தற்காப்பு போர்கலையாக வழக்கத்தில் இருந்தமை உறுதியாகிறது.
கம்பு வீசும் திறன், காலடி அசைவு, வேகம் இது மூன்றுமே சிலம்பத்தின் அடிப்படை திறன்கள். சிலம்பம் கற்பதற்கு உரிய வயதாக 7-8 வயது இனங்காணப்படுகிறது. சுமார் 15 வயதாகும் வரை குருவின் கண்காணிப்பில் நடாத்தப்படும் பயிற்சிகளுக்கு பின்பு, சுமார் 5 வருடங்கள் தனிப்பட்ட ரீதியில் எடுத்துக்கொள்ளும் பயிற்சிகள் நேர்த்தியான சிலம்ப பிரயோகத்தை பெற்றுத்தரும். சிலம்பப்பயிற்சி மெய்ப்பாடம், உடற்கட்டு, மூச்சுப்பயிற்சி, குத்துவரிசை, தட்டு வரிசை, அடிவரிசை, பிடிவரிசை, சிலம்பாட்டம், வர்மம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.
அடிவரிசை முறையில் 18 வகையாகவும், சிலம்பாட்ட வீச்சு முறையில் 72 வகையாகவும் சிலம்பத்தை வகைப்படுத்தலாம். மேலும் துடுக்காண்டம், குறவஞ்சி, மறக்காணம், அலங்கார சிலம்பம், போர் சிலம்பம், பனையேறு மல்லு, நாகதாளி, நாகசீறல், கள்ளன்கம்பு என சிலம்பத்தில் பலவகைகள் உள்ளன. அதே போல பயன்படுத்தும் ஆயுதத்தை கொண்டும் சிலம்பம் வகைப்படுத்ப்படும். சிலம்பம் போர்க்கலையாக மட்டுமில்லாது நல்ல உடல் பயிற்சியாகவும், ஒழுக்க முறையாகவும் பயிலப்பட்டு வந்தது. 15 ஆம் நூற்றாண்டில் உருவான சித்தர் பாடல்கள் தொகுப்பான பதார்த்த குண சிந்தாமணி என்ற நூலில் உள்ள பின்வரும் பாடலில் சிலம்ப பயிற்சியால் வாதம், பித்தம், கபம் ஆகியன சீராகும் என்கிறது.
தென் தமிழ் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களிலேயே சிலம்பத்துக்கான எதிர்பார்ப்பும், மதிப்பும் அதிகமாக காணப்படுகிறது. தமிழக அரசு இக்கலையை பாதுகாக்கும் எண்ணத்தில் தற்போது பாடசாலை விளையாட்டுகளில் ஒன்றாக சிலம்பத்தை அறிவித்துள்ளது.
உலக சிலம்பம் கூட்டமைப்பு, உலக விளையாட்டு அகாடமி சார்பில் சிலம்பக் கலை மற்றும் சிலம்ப ஆசான்களை உலகறியச் செய்யும் வகையில் சிலம்ப விளையாட்டில் உலக சாதனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன்படி இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், சிங்கப்பூர் ஆகிய 7 நாடுகளில் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலம்ப வீரர், வீராங்கனைகள் பங்கேற்று சிலம்பம் விளையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் குளோபர் வேல்டு ரெக்கார்டு நிறுவனம் சார்பில் 170 சிலம்ப ஆசான்களுக்கு வீரக்கலை சிலம்பம் விருதும், சிலம்பக்கலை வளர்ச்சிக்காக உதவும் அனைத்து நிறுவனம் மற்றும் தனிநபர்களுக்கு சிலம்பம் சப்போர்ட்டிங் விருதும் வழங்கப்படுகிறது. அதே போன்று மெகா சிலம்பம் உலக சாதனையும் பதிவு செய்யப்படுகிறது.
தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளிக்கூடத்தில் சிலம்ப விளையாட்டு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து உள்ள சுமார் 1000 மாணவர்கள் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றினர். இந்த நிகழ்ச்சியில் மாலை 4 மணி வரை மாணவ, மாணவிகள் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி அசத்தினர். அதே போன்று தனிநபர் சாதனை நிகழ்ச்சியும் நடந்தது. இதில் அதிகாலை 3.30 மணி முதல் தொடர்ச்சியாக 7 மணி நேரம் 100 மாணவ, மாணவிகள் பாட்டில் மீது நின்றும், தலையில் தண்ணீர் டம்ளர் வைத்தபடியும் சிலம்பு, சுருள்வாள் சுற்றியும் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.