தூத்துக்குடியில் 68-ஆவது ஆண்டு அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தொடக்க கல்வி இணை இயக்குனர் சிவகாமி வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி, தமிழக மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் நகை கடன் பெற்றுள்ள 2500 பேருக்கு 150 கோடி ரூபாய் நகை கடன் தள்ளுபடி செய்ய தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் கூட்டுறவு துறையின் வளர்ச்சிக்காக கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதில் தற்பொழுது 231 பேர் சேர்ந்து பயின்று வருகின்றனர். இவர்களுக்கான பயிற்சி முடிந்ததும் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அரசு பணிக்கும் வழி காட்டப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழகத்தில் 300 கூட்டுறவு மருந்தகங்கள் லாபத்தில் செயல்பட்டு வருகிறது. பொதுவாக ஜெனரிக் மருந்து விற்பனையில் மருத்துவர்கள் மருந்துகளின் பெயரை பரவலாக எழுதி கொடுக்காமல் அதை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களின் பெயர்களை எழுதி கொடுப்பதனால் அந்த பெயரில் உள்ள மருந்துகளை பெறுவதில் மட்டுமே மக்கள் முனைப்பு காட்டுகின்றனர். இது தவறான ஒன்று. எனவே ஜெனரிக் மருந்து விற்பனையில் மருத்துவர்கள் மருந்துகளின் பெயர்களை எழுதி கொடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பயனாளிகளுக்கு 13 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளையும், கூட்டுறவு வார விழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் கனிமொழி எம்பி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி, வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து விவசாயிகள் அதை எதிர்த்து போராடி வருகின்றனர். திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் தொடர்ந்து மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்துள்ளது. பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த நிலையில் மத்திய மோடி அரசு 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என அறிவித்திருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. நாம் நமது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடினால் நிச்சயம் அவை திரும்ப மீட்டெடுக்க முடியும் என்பதை உறுதிபட சொல்லும் வெற்றி. வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கு கொடுக்கப்பட்ட அதே அழுத்தத்தை நீட் தேர்வை திரும்பப் பெறுவதற்கும் எதிர்க்கட்சிகள் கொடுத்து வருகிறது. நாடு முழுவதும் ஒரே சட்டமியற்ற ஒரே அவை தேவையில்லை. ஒருமித்த கருத்து இருந்தாலே போதும் என்றார்.