தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கின. மத்திய அரசு சார்பில் உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக மீண்டும் அகழாய்வு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல இயக்குநர் அருண் ராஜ் தலைமையில் மத்திய தொல்லியல் துறை அலுவலர்கள், பணியாளர்கள் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் 10-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அகழாய்வு பணியில் ஏற்கனவே 12 முதுமக்கள் தாழிகள் மற்றும் பழங்கால மனிதர்களின் வாழ்விட பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அண்மையில் ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட சுண்ணாம்பு தளம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இரண்டாம் அடுக்கில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த முதுமக்கள் தாழிக்குள் பல்வேறு பழங்கால பொருட்கள் இருக்கும் என நம்பப்பட்டது. எனவே இந்த முதுமக்கள் தாழியை திறந்து அதற்குள் இருக்கும் பொருள்களை எடுத்து ஆய்வு செய்ய தொல்லியல் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆகியோர் ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கனிமொழி எம்பி முன்னிலையில் திறக்கப்பட்ட முதுமக்கள் தாழிக்குள் மனிதனின் மண்டை ஓடு, கால் எலும்புகள், சிறு பானைகள், கலையங்கள் இருந்தன.
மேலும், முதுமக்கள் தாழிக்குள் இருந்த பானைகளில் தானியங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், அதன் பக்கவாட்டிலேயோ அல்லது தாழிக்குள்ளோ ஆயுதங்கள் இருப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபரங்களை மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண் ராஜ் விளக்கி கூறினார். தொடர்ந்து முதுமக்கள் தாழிக்குள் இருக்கும் பொருட்களை பாதுகாப்பாக வெளியே எடுத்து ஆய்வு செய்யும் பணியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.