ஒளி கொடுக்கும் கதிரவன் விண்ணில் இருந்து பார்ப்பதால், மண்ணில் இருக்கும் பயிர்கள் தழைக்கின்றன. விண்ணிற்கும், மண்ணிற்கும் நன்றி செலுத்தும் விதமாகத்தான், நம் முன்னோர்கள் கதிரவனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டார்கள். முன்பெல்லாம் மக்கள் மண்பானையில் தான் பொங்கல் வைப்பார்கள். ஆனால், காலத்தின் சூழ்நிலையால் நாம் அதைத் தினமும் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும் பொங்கல் தினத்தன்றாவது மண் அடுப்பில் விறகு வைத்து எரித்து அதன்மீது மண்பானையில் மஞ்சள் கொத்து வைத்து கட்டிக் கோலமிட்டுப் பொங்கல் வைக்க வேண்டும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற இயற்கையைக் கொண்டாடி வழிபட்டால் இனிய வாழ்வு அமையும் என்பதே இதன் நம்பிக்கை.
ஆனால், நகரங்களில் தற்போது பொங்கல் அன்று காலையில் வழக்கமான நாட்களைப் போல் எழுந்து, குளித்து, புத்தாடை அணிந்து, பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக டி.வி.யை ஆன் செய்து வைத்து விட்டு, அந்த நிகழ்ச்சிகளை பார்த்தவாறே, குக்கரில் பச்சரி, வெல்லம் போட்டு ஒரு விசில் வந்ததும் பொங்கல் ரெடியாகி விடுகிறது. இதில் எந்தவித ஆட்டம் பாட்டமோ, கொண்டாட்டமோ இருப்பதில்லை. அதை தொடர்ந்து குடும்பத்தினர் அனைவருமே டி.வி. முன் அமர்ந்து பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியையும், இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக நிகழ்ச்சியையும் பார்த்தவாறு, பொங்கலையும், கரும்பையும் சாப்பிடுவார்கள். இதனால் கரும்பு, சர்க்கரை பொங்கலில் உள்ள தித்திப்பு அவர்களுக்கு தெரிவதில்லை. தங்கள் வீட்டிற்குள்ளேயே பொங்கல் பண்டிகையை முடித்து கொள்கின்றனர். நாம் மறந்தது மண்பானை பொங்கல் மட்டுமல்ல, கோடி சந்தோஷத்தையும் தான்.
பொங்கல் நமது பாரம்பரியமிக்க மரபு பண்டிகை. வீட்டு முற்றத்தில் மண்ணால் செய்யப்பட்ட அடுப்புக்கட்டியில், புது மண் பானையில் புத்தரிசி கொண்டு பொங்கல் வைப்பதுதான் அதன் சிறப்பு. இதனால் தான் அதற்கு பொங்கல் என்ற பெயரே வந்தது. ஆனால் கால மாற்றத்தில் இந்த நடைமுறைகள் மெல்ல மெல்ல மாறத் தொடங்கின. முற்றத்தில் வைக்கப்பட்ட பொங்கல் நகரங்களில் வீட்டுக்குள் இடம் பெயர்ந்தது. மண்பானை, பித்தளை, சில்வர் என்றாகி இப்போது குக்கராக மாறி விட்டது.
இவற்றில் மண் பானையை ஒரங் கட்டியதுதான் நாம் செய்த மிகப்பெரிய வரலாற்றுப்பிழை. பாரம்பரியம் மிக்க மண் பானையில் பொங்கலிடுவது தற்போது நகரங்களில் முற்றிலும் அழிந்து விட்டது. கிராமங்களிலும் இதன் பயன்பாடு குறைந்து வருவது வேதனைக் குரியது. 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பதற்கேற்ப வீடுகளில் உள்ள பழைய மண்பாண்டங்களை பொங்கலுக்கு முன் தினமான போகியன்று போட்டுடைத்து விட்டு, தைத்திங்கள் முதல் நாளில் இருந்து புதிய பானைகளில் சமைக்கும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வந்தது. ஆனால் இன்று நம்மிடையே அப்பழக்கம் இல்லாமல் போய் விட்டது.
நம் வாழ்வில் முக்கிய பங்கு வகித்த மண்பாண்டம் இன்று காட்சிப் பொருளாக மாறிவருகிறது. பொங்கல் பண்டிகைக்கு கூட பயன்படுத்தாமல் தவிர்த்து வருகிறோம். மண்பானையை மறந்து ஆரோக்கியம் இழந்து பாரம்பரியத்தை சிதைத்து வெறுமனே சம்பிரதாயமாக தான் இன்றைய பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் மண்பாண்டங்கள், மண்ணடுப்புகள் பயன்படுத்தப்பட்ட காலத்தில் குயவர்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது. ஆனால் இன்று அவற்றை மக்கள் பயன்படுத்த தவறியதால் அவர்களின் வாழ்வாதாரம் நலிவடைந்து விட்டது. பலர் தங்கள் குலதொழிலை விட்டு வேறு வேலைக்கு சென்றுவிட்டனர். இருப்பினும் சிலர் இன்னும் இத்தொழிலை உயிர்ப்புடன் செய்துவருகின்றனர். அவர்களை போற்றும் விதமாகமும் நமது பண்பாட்டை பறைசாற்றும் விதமாகவும் நாம் பொங்கல் அன்றாவது மண்பானையில் பொங்கலிட்டு பாரம்பரியத்தை காக்க வேண்டும்.
'மண்பாண்ட தொழிலாளர் கோரிக்கை'
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதையொட்டி பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி சுற்றுவட்டாரத்தில் காவாகுளம், மேலக்கிடாரம் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இகுதுறித்து மண்பானை தயாரிக்கும் தொழிலாளிகள் நம்மிடம் பேசுகையில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானைகளை வழக்கத்திற்கு அதிகமாக உற்பத்தி செய்து வருகிறோம். தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பானை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது பொங்கலை சில்வர், பித்தளை பானைகளில் வைத்து விடுகின்றனர். இதனால் மண்பாண்ட பொருட்கள் விற்பனை ஆகாமல் போய்விடுகிறது. இதனால் இத்தொழிலில் போதுமான வருமானம் இல்லாமல் இளைஞர்கள் வேறு வேலைகளுக்கு சென்று விடுகின்றனர்.
மேலும் காலங்காலமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் மட்டுமே செய்து வருகின்றனர். எனவே இத்தொழிலை நம்பி உள்ள மண்பாண்ட தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு மண்பானைகளை கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகளில் வழங்கினால் இத்தொழிலை நம்பி உள்ள ஒரு ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனக் கூறினர்.