கடல் தரும் செல்வங்கள் கணக்கற்றவை. ஆனால் அவற்றில் சிலவற்றை மட்டுமே நாம் பயன்படுத்துகின்றோம். கடலினுள் பல்லாயிரக்கணக்கான தாவரங்களும் உயிரினங்களும் வாழ்கின்றன. தாவரங்களுள் உயிரினங்களும் வாழ்கின்றன. அவற்றுள் பல மருத்துவ குணம் கொண்டவை. அவற்றில் ஒன்றுதான் சங்கு. இதனைப் பண்டைக்காலம் முதலே புனிதப் பொருளாகவும் மக்கள் பயன்படுத்தியுள்ளனர். கடல் வாழ் உயிரினமான கிளிஞ்சங் வகை புழுக்கள் தனது பாதுகாப்பிற்காகக் கட்டிக் கொள்ளும் மேல் கவசம்தான் சங்கு. அனைத்து நீர்நிலைகளிலும் சங்கு காணப்படுகிறது. ஆனால் கடலில்தான் எண்ணற்ற சங்குகள் கிடைக்கின்றன.




ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளான, ஒப்பிலான், மாரியூர், மூக்கையூர், ரோஜ்மாநகர், வெள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சங்கு பிடிப்பதை மீனவர்கள் தனித் தொழிலாக செய்து வருகின்றனர். வலைகளில் சிக்கும் சங்குகளில் காணப்படுகின்ற சுவை மிகுந்த இறைச்சி, மீனவ மக்களால் உணவாக பயன்படுத்தபடுகிறது. மேலும் பிடித்துவரப்படும் சங்குகளை சுத்தம் செய்து, வியாபாரிகளுக்கு விற்பனையும் செய்து வருகின்றனர் இப்பகுதி மீனவர்கள்.




மீன் உணவுகளை அதிகம் விரும்பி உண்போர் அதிகம் அறிந்திடாத கடல் உணவு, சங்கு இறைச்சி. ஆழ்கடலில் கண்டெடுக்கப்படும் சங்குகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் சுவை மிகுந்த இறைச்சி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் முக்கிய வாழ்வாதாரமாகத் திகழ்கிறது. நம் கற்பனைக்கெட்டாத பல அதிசயங்களை தனக்குள் பொதிந்து வைத்துள்ள கடல், உலகில் பல கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. அள்ள அள்ளக் குறையாத மீன் வளம் மட்டுமல்ல, ஆழ் கடலிலிருந்து மீனவர்களால் பிடித்து வரப்படும் சங்குகளும் மீனவர்களுக்கு பொருள் ஈட்டித் தருகிறது. சங்குகளுக்குள் சுவை மிகுந்த இறைச்சி இருப்பது பெரும்பாலானோர் அறியாத ஒன்று.




சங்கில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இறைச்சிக்கு என தனியே மருத்துவ குணம் உள்ளதால், சிறுவயதினர் முதல் பெரியவர் வரை தாராளமாக உண்ணலாம் என்று கூறும் மீனவர்கள், சர்க்கரை நோயாளிகள் கூட இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என ஆர்வம் தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து அப்பகுதி மீனவர்கள் நம்மிடையே கூறும்போது, அதிகாலையில் கடலுக்குச் சென்று, அரசால் தடை செய்யப்படாத பால்சங்கு, யானை முழி உள்ளிட்ட சங்குகளை மட்டும் சேகரிப்பதாக தெரிவிக்கின்றனர். வலைகளில் பிடிபடும் தடை செய்யப்பட்ட மற்ற சங்குகளை மறுபடியும் கடலிலேயே விட்டுவிடுவதாகவும் கூறினர்.




சங்குகளில் இருந்து எடுக்கப்படும் இறைச்சிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால், கிலோ ஒன்று 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே மீன்பிடித் தொழிலில் பல்வேறு உத்திகள் கடைபிடிக்கப்பட்டாலும், சங்கு சேகரித்தல் மற்றும் சங்கு இறைச்சி விற்பனை மூலம்,தங்களுக்கென்று ஒரு பொருளாதாரத்தை ஏற்படுத்திக் கொண்ட ராமநாதபுரம் பகுதி மீனவர்களை  பாராட்ட வேண்டும்.