நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை எதிரே உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான காந்திமதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை மையத்தை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று தொடங்கி வைத்தார், மாவட்ட ஆட்சித் தலைவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென பள்ளி வளாகத்திற்குள் புகுந்த இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் இந்து முன்னணியினர்  திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து திருநெல்வேலி கோட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையில் இந்து முன்னணி அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது இந்து முன்னணி அமைப்பாளருக்கும், கோட்டாட்சியருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது,




 இதைத்தொடர்ந்து இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் நிருபருக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறும்போது, ”அறநிலையத்துறைக்கு சொந்தமான பாளையங்கோட்டையில் உள்ள காந்திமதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தொற்று பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது, இங்கு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பள்ளியில் வகுப்பு நடைபெற்றுக் கொண்டு வருகிறது, இதனால்  அவர்களை வேறு மதத்தைச் சேர்ந்த பள்ளிக்கு மாற்றம் செய்ய உள்ளனர், இது பெண்கள் பள்ளி, இதனை வேறு மதத்தை சேர்ந்த ஆண்கள் பள்ளிக்கு மாற்றுவதாக தெரிவித்துள்ளனர், பெண்கள் பள்ளியை ஆண்கள் படிக்கும் பள்ளிக்கு மாற்றம் செய்வதற்கு நாங்கள் வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறோம், இது பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு மிகப்பெரிய மதமோதலை நெல்லை மாவட்டத்தில் ஏற்படுத்தும் என்ற அடிப்படை சிந்தனை இல்லாமல் மாவட்ட  நிர்வாகம் செயல்படுகிறது,




இதற்கு இங்குள்ள பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர், ஆனால் மாவட்ட  கல்வித்துறை அவர்களை மிரட்டி அங்கு செல்ல கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள், மற்ற மதத்தைச் சேர்ந்த பள்ளிகளுக்கு நேரடியாக சென்று இது போல கொரோனா தொற்று பரிசோதனை மையம் அமைக்க முடியுமா ? அறநிலையத்துறைக்கு சொந்தமான பள்ளி என்பதால் இந்த பள்ளி மாணவர்களை உடனடியாக வெளியேற்றி பரிசோதனை மையம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம், இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் இங்கேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தார்,




இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் வேறு பள்ளிகளுக்கு மாணவிகளை மாற்றுவதை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் தெரிவித்தனர். இதனால் இந்து முன்னணி அமைப்பினர் கலைந்து சென்றனர். ஆட்சியர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் திடீரென  இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.