பொங்கல் என்பது தென்னிந்தியாவில் வாழும் மக்களின் பண்பாட்டுத் திருவிழாவாகும். தென் தமிழகத்தில் இன்னமும் கிராமங்களில் பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசுகிறார்கள். இது கிராமங்களில் காணப்படும் அற்புதக் காட்சி. துன்பங்கள் வெளியேற்றப்படும் திருவிழா 'போக்கி' என்றனர். இது காலப்போக்கில் 'போகி' என்று மாறிவிட்டது. தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல். மாட்டுப் பொங்கலை முன்னிட்டு  எருதுவிடும் திருவிழா நடைபெறும். இவ்விழா ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மஞ்சுவிரட்டு எனவும்,   எருதுகட்டு எனவும் வழக்கத்தில் சொல்லப்படுகிறது.




சங்க காலங்களில் மகளிரை மணக்க விரும்புவோர், பெண்ணுக்காக வளர்க்கப்பட்ட காளையை அடக்குவார்களாம். அதை அடக்கியவர்க்கே அப்பெண்ணை மணம்முடித்து வைப்பார்களாம். காளைக்கு பயந்து பின்வாங்கும் ஆண்களை பெண்கள் மணக்கமாட்டர்களாம்.,அதிலும்   காளையின் கொம்புகளுக்கு பயந்தவனை மறு பிறவியில் கூடக் கணவனாக ஏற்கமாட்டார்களாம்.இந்த வழக்கம் தற்போது நடைமுறையில் இருந்தால் ஆண்கள் பாடு  திண்டாட்டம்தான்.




இவ்வாறு காலங்காலமாக பொங்கல் பண்டிகையையொட்டி மாட்டுப் பொங்கலன்று நடத்தப்பட்டு வரும் எருதுகட்டு போட்டியை மாவட்டத்தில்  நடத்த அனுமதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் காளைகளை பயிற்சியில் ஈடுபடுத்தும் பணியில், அதன் உரிமையாளர்கள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். எருது விடும் விழாவுக்கு கடந்த ஒரு மாதமாக காளைகளுக்கு நீச்சல், ஓட்டம், மணல் குவியலில் கிளறி முட்டசெய்வது ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. காளைகளுக்கு கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, தவிடு, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, வாழைப்பழம், முட்டை, தானியம் கலந்த கூழ் ஆகியவை வழங்கப்படுகின்றன. கடும் பயிற்சி பெறும் மாடுகள் பொங்கல் பண்டிகையின்போது, விழா நடக்கும் விளையாட்டு மைதானத்துக்கு வர ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றன


'கிராமத்து திமிரோடு காளையர்கள்'




 


ராமநாதபுரம்  மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிக்காக  காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் முறையான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை மட்டுமின்றி,இந்தப் பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் ஜல்லிக்கட்டு மட்டும் வடமாடு மஞ்சுவிரட்டு  போட்டி முக்கிய நிகழ்ச்சியில் பங்காற்றி வருகிறது இதனை இப்பகுதி மக்களும், இளைஞர்களும் வீர விளையாட்டாகவே கருதுகின்றனர். அந்த வகையில் தற்போது நடைபெற உள்ள பொங்கல் மற்றும்  திருவிழா காலங்களில் தங்கள் கிராமத்தை சேர்ந்த காளைகள் பங்கேற்கும் வகையில், காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முறையான பயிற்சி கிராம பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 


'வடமாடு மஞ்சு விரட்டு'


வடமாடு மஞ்சுவிரட்டு என்பது இப்பகுதி மக்கள் தங்கள் வணங்கும்  குலதெய்வத்தை வேண்டி வணங்கி  வடம் திரித்து விரதமிருந்து அதனை பாதுகாப்பாக வைப்பார்கள். கீழத்தூவல், ஏனாதி, காத்தாகுளம், புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து மாடுபிடி வீரர்கள் தங்கள் கிராமத்தை சேர்ந்த காளை மாடுகளுக்கு முறையாக பராமரித்து பயிற்சி அளிப்பார்கள். அந்த வகையில் தற்போது முதுகுளத்தூர் பகுதியில் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும்  முறையான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.




இது குறித்து வடமாடு மஞ்சுவிரட்டு காளைகளை வளர்ப்போர் கூறுகையில், காளைகளை கொட்டும்  முழக்கத்துடன் வெளியில் அவிழ்த்து விடுத்து அவற்றினைத் தழுவிப் பிடிக்கச்செய்யும் ஒரு வீர விளையாட்டுதான்  மஞ்சுவிரட்டு.மஞ்சு என்ற சொல்லுக்கு யானையின் முதுகு என்று பொருளும் உண்டு. யானையின் முதுகில் பயணம் செய்வது, வீரமாகக் கருதப்படுகிறது.  மாட்டுப்பொங்கலையொட்டி, நடக்க இருக்கும், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிக்கு  ஒருவாரத்திற்கு முன்னதாக காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் முறையான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாடுகளுக்கு தேவையான உணவு பேரிச்சம்பழம், பருத்திக்கொட்டை உள்ளிட்ட  சத்தான உணவுப் பொருட்களை மாடுகளுக்கு வழங்கி அவற்றை பராமரித்து வருவதாகவும், தென் மாவட்டங்களில் இத்தகைய வீர விளையாட்டு அழியாமல் பாதுகாக்க இது போன்ற பயிற்சி அளித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.