தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள், சாலையோர கடைகள் என இறுதி கட்ட பொருட்கள் விற்பனை சூடு பிடித்து உள்ளது. குறிப்பாக பொங்கலுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் வாங்குவதற்கு மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நெல்லையை பொறுத்தவரை மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயன் என்பதால் அதிக அளவில் நெற்பயிர் விளைவிக்கப்படுகிறது, அதற்கு அடுத்தபடியாக காய்கறிகளும் விளைவிக்கப்பட்டு நேரடியாக மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படும்,
நெல்லை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தங்கள் விளைவித்த பொருட்களை தாங்களே நேரடியாக சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதால் பண்டிகை காலங்களில் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைவர், இந்த சூழலில் இந்தாண்டு பெய்த பருவமழை விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலை கொடுத்து உள்ளது.
இதனால் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு மார்க்கெட் பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் கிழங்கு வகைகள், பச்சை காய்கறிகள், கரும்பு, மஞ்சள், பூக்கள், மண் பானைகள் என தாங்கள் விளைவித்த மற்றும் தயாரித்த பொருட்களை கொண்டு வந்து குவித்து வைத்து உள்ளனர். இதனால் மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது, குறிப்பாக நெல்லை மகாராஜா நகர் உழவர் சந்தையில் காய்கறிகளின் விலையும் கடந்த இரண்டு நாட்களை விட சற்று அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2 நாட்களாக குறைவாக இருந்த ஒரு சில காய்கறிகள் இன்று 10 முதல் 20 ரூபாய் அளவிற்கு விலை சற்று அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். காய்கறிகள் பெரிய அளவில் இந்தாண்டு விலையேற்றம் இல்லை, ஏனெனில் இந்தாண்டு பருவ மழையினால் காய்கறிகள் நல்ல விளைச்சல் கண்டு உள்ளதால் விலையும் ஓரளவு நடுத்தரமாக உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
இன்றைய நிலவரப்படி கத்தரிக்காய் கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 36 ரூபாய்க்கும், தக்காளி 38 ரூபாய்க்கும், அவரைக்காய் 50 முதல் 60 ரூபாய்க்கும், 1 முருங்கைக்காய் 50 ரூபாய்க்கும், மாங்காய் 70 முதல் 80 ரூபாய்க்கும், பூசணி 30 ரூபாய்க்கும், கேரட் 50 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 62 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக காய்கறிகளின் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டு உள்ளது. அதே போல மஞ்சள் கொத்து ஒன்றின் விலை 20 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நெல்லையை பொறுத்தவரை வெளி மாவட்டங்களில் இருந்து குறிப்பாக கம்பம், தேனி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து கரும்பு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும், இந்த சூழலில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு கரும்பின் விலையும் குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர், இந்தாண்டு நல்ல விளைச்சல் இருந்த காரணத்தால் 10 கரும்பு கொண்ட ஒரு கட்டு 300 முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.நெல்லையில் மொத்தமாக கடந்த இரண்டு நாட்களாக 300 டன் அளவிற்கு காய்கறிகள் விற்பனை நடைபெற்ற நிலையில் இன்று 50 டன் - க்கு மேல் விற்பனை இருக்கும் எனவும் தெரிவித்தனர்.
மேலும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவி வருவதால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், கட்டுப்பாட்டுகளையும் அரசு விதித்து உள்ளது. அதன்படி பொதுமக்கள் கூட்டம் கூட கூடாது என்றும், சமூக இடைவெளியை கடைபிடித்து முகக் கவசங்களை அணிந்து பொருட்களை வாங்கி செல்ல வேண்டும், வீட்டிற்கு சென்றவுடன் கை களை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு அறிவுரைகளை அதிகாரிகள் மைக் மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியும், கொரோனா தொற்றில் இருந்து தங்களை காத்து பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்..