கன்னியாகுமரி மாவட்ட போலீசார் சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு காவல் துறையில் சைபர் கிரைம் காவல் நிலையம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 150 பாலியல் சம்பந்தமான புகார்களை பெண்கள் அளித்துள்ளனர். மேலும் மாவட்ட சைபர் கிரைம் மூலமாக போலியான மற்றும் மேற்ண்ட புகார்களில் சம்பந்தப்பட்ட 200 முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், குண்டர் சட்டம் போடப்பட்டும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பெரும்பாலான புகார்கள் கல்லூரியில் படிக்கும் பெண்கள் தான் அளித்துள்ளனர். சைபர் குற்றங்கள் நடைபெறுவதற்கு நெட்இணைப்புடன் ஒரு கணினி மற்றும் ஒரு மொபைல் போன் இருந்தாலே போதும். சமூக வலைத்தளங்களில் முன்பின் தெரியாத நபர்களிடம் பேசுவதோ அவர்கள் நம் பதிவிடும் போட்டோவுக்கு லைக் பொடுப்பதால் அவர்களிடம் பேசுவதோ கூடாது. நமக்கு குறிப்பிட்ட நபரை தெரியவில்லை என்றால் அவரை பிளாக் செய்து விடுவது நல்லது.
நாம் பதிவிடும் போட்டோக்களையே எடுத்து அதை வைத்து மிரட்டி நடக்கும் சைபர் குற்றங்கள் அதிகம். நம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு, மேட்ரி மோனி மற்றும் போட்டோ வைத்து மிரட்டுவது போன்ற சைபர் குற்றங்கள் அதிகளவு நடைபெற்று வருகிறது. வேலைவாய்ப்பு மற்றும் மேட்ரிமோனியில் பாதிக்கப் பட்டவர்கள் பல லட்சங்களை சைபர் கிரைம் குற்றவாளி களிடம் இழந்துள்ளனர்.ஆண்களை பெண்கள் போன்று போலியான முகநூல் பக்கங்களிலிருந்து பேசி அவர்களை நமப வைத்து ஆபாசமாக செல்பி எடுக்க வைத்து அதில் பணம் பறிக்கும் இணைய குற்றவாளிகளும் அதிகரித்திருக்கிறார்கள். இணைய குற்றங்கள் ஆண், பெண் என்ற பாகுபாடு பார்ப்பதில்லை.
மேலும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் நாம் பதிவிடும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் நமது நண்பர்களுக்கு தெரியுமாறு மட்டுமே வைக்க வேண்டும். இணையத்தில் நம் பாதுகாப் பில் நாம் முக்கியமாக அதிக கவனம் செலுத்த வேண்டும்.மேலும் நட்பு வட்டத்தில் நமக்கு தெரிந்தவர்களை மட்டுமே இணைக்க வேண்டும். நம் மாணவ - மாணவிகள் இணையத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட்டு இணைய குற்றவாளிகளிடம் ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.