பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோவில்களில் இன்று காலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திரத்தை ஒட்டி குலதெய்வம் கோயிலான சாஸ்தா கோவிலுக்கு பக்தர்கள் தங்கள் குடும்பங்களுடன் சென்று வழிபாடு நடத்துவர். அதிகாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை சாஸ்தாவிற்கு மாலை அணிவித்து சர்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர். இரவு 12 மணிக்கு பிறகு சாஸ்தாவின் காவல் தெய்வங்களான கருப்பசாமி, சுடலை மாடசாமி,  தளவாய் மாடசாமி, சங்கிலி மாடசாமி,  கரையடி மாடசாமி, முண்டசாமி, சப்பாணி மாடசாமி,  தூண்டில் மாடசாமி, வன்னியர், வன்னிய தலைவி, பேச்சியம்மாள் பிரம்மசக்தி உள்ளிட்ட தெய்வங்களுக்கு படையல்கள் வைத்து, பூஜை செய்து ஆடு, கோழி  போன்றவை பலியிடுவர்.




இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சாஸ்தா கோவில்கள் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி  நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர், இதையொட்டி பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் கிராமத்தில் ஆயிரங்கால் சாஸ்தா திருக்கோவில் இன்று காலையில் இருந்தே பொங்கலிட்டு சுவாமிக்கு படையல் வைத்து பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாமி தரிசனம் மேற்கொண்டு சென்றனர். பல்வேறு மாநிலங்களில் வசித்து வருபவர்களும் தங்களது சாஸ்தாவை வணங்க தமிழகத்தில் உள்ள கோவில்களில் வழிபாடு நடத்த வருகை புரிந்து உள்ளனர்.




நெல்லை மாவட்டம் பணகுடி அருகே அமைந்துள்ளது ஸ்ரீ வீர சாஸ்தா கோவில்,  பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு  பல்வேறு சமுதாயத்தினர் ஆண்டாண்டு காலம் இங்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம், மேலும் இக்கோவிலில் ஒரு சிலர் இங்கு ஆடுகள் கோழிகளை நேர்த்திக்கடனாக பலியிட்டு வழிபாடு செய்வர், இன்று ஆடு கோழி பலியிடுவதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனால் இரு தரப்பினருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் அங்கு சென்று இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஆடுகள் கோழிகளை மாற்று இடத்தில் பலியிட்டுக் கொள்ளவும், கோயில் வளாகத்திற்குள் கொண்டு செல்லக்கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது.


மேலும் அடுத்த ஆண்டு வழிபாடு செய்வது குறித்து நீதிமன்ற நடவடிக்கை மூலம் தீர்வு ஏற்படுத்தி கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டது, காவல்துறையினரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு தரப்பினரும் சமாதானத்தின் பேரில் பொங்கலிட்டு ஆடுகள் கோழிகளை பலியிட்டு வழிபாடு செய்தனர். இதனால் அக்கோவிலில் நீண்ட நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.