சட்ட விரோதமாக இலங்கை சென்று வந்த வழக்கு: விடுதலைப்புலிகள் அமைப்பைச் சோ்ந்தவர் நீதிமன்றத்தில் ஆஜர்..! விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சோ்ந்தவா், தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கை சென்று வந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் அவர்  ஆஜா்படுத்தப்பட்டாா்.


முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டது. இலங்கையில் புலிகள் இயக்கத்துக்கு எதிராக 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் அந்நாட்டு ராணுவம் வெற்றி பெற்றதை அடுத்து., புலிகள் இயக்கம் முற்றிலுமாக அழித்து விட்டதாக அந்த நாடு கூறிவருகிறது. ஆனால், தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சிகளில் அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் ஒன்று கூடி செயல்பட்டு வருவதாகவும், குறிப்பாக, தமிழகத்தில் இன்னமும் இதற்கு ஆதரவு தொடர்ந்து இருப்பதாகவும் கருதப்படுகிறது.




இந்த நிலையில், இலங்கை கிளிநொச்சியை சோ்ந்தவா் குமரன் என்ற முருகன் (35). விடுதலைப்புலிகள் அமைப்பைச் சோ்ந்தவா். இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட  போா் முடிந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு  வந்து, விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் ஏற்படுத்தும் முயற்சியில் குமரன் மற்றும் சிலர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவா்களை கடந்த 2015 ஆம் ஆண்டு கியூ பிரிவு போலீஸாா் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே பிடிக்க முயன்றனா். அப்போது சுபாஷ்கரன், கிருஷ்ணகுமாா், ராஜேந்திரன், உச்சிப்புளியை சோ்ந்த மகேந்திரன் ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.அப்போது குமரன் மற்றும்  ஸ்ரீ ஆகியோா் தப்பி ஓடி விட்டனா்.



இந்நிலையில் இலங்கை தப்பிச் சென்ற குமரன், கடந்த 2017-ஆம் ஆண்டு  கன்னியாகுமரியில் வைத்து  கைது செய்யப்பட்டாா். இந்த நிலையில், அவா்கள் மீதான வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம், சுபாஷ்கரன் மற்றும் கிருஷ்ணகுமாருக்கு 10 ஆண்டுகள், ராஜேந்திரனுக்கு 5 ஆண்டுகள், குமரனுக்கு 2 ஆண்டுகள், மகேந்திரனுக்கு 6 மாதங்கள் என சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கின் விசாரணை மற்றும் தண்டனை உத்தரவின் போது தலைமறைவாக இருந்த ஸ்ரீ என்பவா் கடந்த ஜனவரி மாதம்  கைதானாா். இந்நிலையில், சட்டவிரோதமாக இலங்கை சென்று வந்த வழக்கில் நேற்று ராமநாதபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் எண் 2 இல், குமரன் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை வரும் 29 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த நீதித்துறை நடுவா் விஜய ஆனந்த் உத்தரவிட்டாா். இதையடுத்து குமரன் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.