நெல்லை சந்திப்பு அருகே CN வில்லேஜ் தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி சுமதி. இவருக்கு 5 ஆம் வகுப்பு மற்றும் 2 ஆம் வகுப்பு படிக்கும் 2 பெண் குழந்தைகள் உள்ளது.  இவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஸ்டாப் நர்சாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று வீட்டில் தனது இரு குழந்தைகளுடன் தனியாக இருந்த சுமதி திடீரென விஷம் அருந்தியதாக தெரிகிறது. அப்போது தனது குழந்தைகளுக்கும் கொடுத்து உள்ளார். இதில் மூத்த மகள் விவரம் தெரிந்ததால் விஷத்தை குடிக்க மறுத்து ரூமுக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.  விவரம் அறியாத  இரண்டாவது மகள் சுப ராஜேஸ்வரி விஷத்தை குடித்து உள்ளார்,




இருவரும் விஷமருந்தியதை கவனித்த குடும்பத்தினர் இருவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து உள்ளனர், ஆனால் சிகிச்சை பலனின்றி சுமதியின் 8 வயது மகள் சுப ராஜேஸ்வரி நேற்றிரவு பரிதபமாக உயிரிழந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த சுமதியும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். சுமதி செவிலியர் என்பதால் உயிர் பிழைக்க முடியாத அதிக வீரியம் கொண்ட மருந்தை உட்கொண்டு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து நெல்லை சந்திப்பு காவல்துறையினர் சுமதியின் கணவர் மாடசாமி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மாடசாமி சுமதி தம்பதியினருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.




6 மாதம் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர், குறிப்பாக சம்பளப் பணம் செலவு செய்வது தொடர்பாக மாடசாமி மற்றும் சுமதிக்கு அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும், சம்பவத்தன்று வாக்குவாதம் முற்றியதால் மனவேதனையில் சுமதி தனது குழந்தையுடன் சேர்ந்து தற்கொலை முடிவிற்கு வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் மாடசாமியிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அரசு மருத்துவமனையில் செவிலியராக நல்ல வேலை, சம்பளம், குழந்தைகள் என வாழ்ந்து வந்த சுமதி குடும்ப பிரச்சினையில் ஒரு நிமிடம் யோசிக்காமல் எடுத்த முடிவால் இரண்டு உயிர் பரிதாபமாக பிரிந்தது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது


தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060.