கடலோர மாவட்டங்களில் ஒன்றான துறைமுக நகரமான தூத்துக்குடியை மையமாக கொண்டு கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தூத்துக்குடி பகுதியில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் மஞ்சள், கடல் அட்டை, களைக்கொல்லி மருந்து உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இலங்கையில் இருந்து ஆட்களையும் கடத்தி தமிழகத்துக்குள் ஊடுறுவ செய்த சம்பவமும் தூத்துக்குடியில் நடந்து உள்ளது. இதனால் கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.




அதே நேரத்தில் தூத்துக்குடியில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையும் கொடி கட்டி பறக்கிறது. தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை செய்ததாக ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதை பொருள் தடுப்பு குற்றத்தில் 380 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 கிலோ ஹெராயின் என்னும் போதைப்பொருள் உட்பட 356 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. போதை பொருள் கடத்தல் விற்பனை செய்ததாக 23 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில்கைது செய்யப்பட்டனர்.




கடந்த மார்ச் வரை கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 49 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 25.500 கிலோ கஞ்சா, 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. கஞ்சா உள்ளிட்ட போதை  பொருள் வழக்கில் ஈடுபட்ட 22 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். சமீபத்தில் தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட 26 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.




இந்த நிலையில் தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் மற்றும் போலீசார் அய்யனார்புரம் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை மடக்கி சோதனை செய்தனர். இதில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து பதுக்கி வைக்கப்பட்ட ஒரு கிலோ 700 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காரில் வந்த தூத்துக்குடி சகாயபுரத்தைச் சேர்ந்த ராமர் , வெள்ளப்பட்டியைச் சேர்ந்த புருசோத்தமன் ஏஞ்சல் ,மோட்டார் சைக்கிள்களில் வந்த முத்தையாபுரத்தைச் சேர்ந்த மதன்குமார், தூத்துக்குடி தெற்கு எம்பரர் தெருவைச் சேர்ந்த சரண் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வந்த கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களையும், ஒரு லட்சம் ரொக்கப்பணம், 3 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரையும் தேடி வருகின்றனர்.


தொடர்ந்து கஞ்சா கடத்தல் காரர்கள், விற்பனையாளர்கள் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடந்து கொண்டே இருக்கிறது. கஞ்சா விற்பனை சங்கிலியை உடைத்தெறிய போலீசார் திட்டமிட்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி விற்பனை களமாகவும், கடத்தல் கேந்திரமாகவும் மாற்றி வரும் போதை பொருள் கடத்தல் ஆசாமிகளுக்கு, ஆதரவாக இருப்பவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.