நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கேசவனேரியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் பிரகாஷ் (வயது 25). தொழிற்கல்வி படித்த இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் வள்ளியூர் அருகே உள்ள வள்ளியம்மாள் புரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் திவ்யா (வயது 22)  என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருவரும் கடந்த ஐந்து வருட காலமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டை சேர்ந்த பெற்றோர்களும் இதனை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.




இந்நிலையில் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு பிரகாஷ் சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பி உள்ளார். அப்போது விபத்து ஏற்பட்டு அவரது இரண்டு கால்களும் செயல் இழந்துவிட்டன. இரு கால்களும் செயலிழந்த நிலையில் தொடர்ந்து திவ்யாவும், பிரகாஷூம் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரகாஷ்க்கு விபத்து ஏற்பட்டு கால்கள் செயல் இழந்து விட்டதால் திவ்யாவின் பெற்றோர்கள் இவர்களை திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் கடந்த 20 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனை அறிந்த திவ்யாவின் பெற்றோர் தனது மகளை பிரகாஷ் கடத்தி சென்றதாக வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறியும், காதலர்கள் இருவரும் பிரகாஷின் வீட்டில் வைத்து பிரகாஷின் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.




திருமணத்தை கேள்விப்பட்ட திவ்யாவின் பெற்றோர்கள் பிரகாஷின் வீட்டிற்கு  சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.. தொடர்ந்து பிரகாஷை சரமாரியாக தாக்கி வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி  திவ்யாவை தரதரவென அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பிரகாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து பிரகாஷ் வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அப்புகாரில் பிரகாஷ் தனது காதல்  மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வள்ளியூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கால்களை இழந்த பிரகாஷுடன் தனது மகள் வாழ்வது சரியல்ல என அவரை தாக்கி அவரிடம் இருந்து அவரது மனைவியான திவ்யாவை அவரது பெற்றோர்கள் பிரித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண