மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 14,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து 10,000 கன அடியாக குறைந்தது.

 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வந்த தொடர் கனமழையால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 இலட்சம் கன அடி வரை நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் மழை முற்றிலும் குறைந்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளது. மேலும் கர்நாடக மாநில கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு அடிப்படையாக குறைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நீர்வரத்து அதிகரித்தது. 

 

தற்போது மழை குறைந்ததால் இரண்டு நாட்களாக காவிரி ஆற்றில்  தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 14,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று குறைந்து வினாடிக்கு 10,000 கன அடியாக சரிந்துள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கின் போது, ஒகேனக்கல்லில் பாதுகாப்பு அம்சங்கள் சேதமடைந்ததால், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, பரிசல் பயணத்திற்கு மட்டும் அனுமதி வழங்கியும், அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது. இந்த நிலையில் நீர்திறப்பு குறைக்கப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் மேலும் நீர்வரத்து குறைய வாய்ப்புள்ளதாக மத்திய நீர் வள ஆண் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.



 

அரூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மளிகை கடைக்கு சீல் வைத்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

 

தருமபுரி மாவட்டம் அரூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை மற்றும் புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பானு சுஜாதா, அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பென்னாசிர் பாத்திமா உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் பாஸ்கர்பாபு உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், அரூர் கடைவீதியில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.



 

அப்போது அரூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து இந்த மளிகை கடைக்கு சீல் வைத்து, கடையிலிருந்த 2.7 கிலோ எடை கொண்ட போதை மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கிருந்த வணிகர் சங்க நிர்வாகிகளுக்கு அரூர் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் பாபு குட்கா போதைப் பொருள்  பாதிப்பு குறித்து அறிவுரைகள் வழங்கினார்.