நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் காரையார் அணைக்கு மேலே இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதிக்குள் பிரசித்தி பெற்ற பாணதீர்த்தம் அருவி உள்ளது. இந்த அருவிக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த அருவியை வான தீர்த்த அருவி என்றே அழைப்பதுண்டு.


பாபநாசம் பாண தீர்த்த அருவி:


ராமன் தனது தந்தையான தசரதருக்கு இங்கு தான்  இறுதிச் சடங்கு செய்து திதி கொடுத்ததாக புராணங்கள் கூறுகின்றது. அதே போல அகத்திய முனிவரும் இங்கு தான் நீராடியதாகவும் கூறப்படுகிறது.. பின் நாட்களில் இந்த வான தீர்த்த அருவியானது பாண தீர்த்தம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.


அதோடு மட்டுமின்றி மேலும் ஒரு சிறப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து காடுகளுக்கு நடுவே ஊடுருவி வரும் நிலையில் பல்வேறு மூலிகைகளை தழுவி வெள்ளமாக வந்து பாயும் இந்த அருவியில் குளிப்பதால் தீராத நோயும் தீரும், உடலுக்கு மனதுக்கும் புத்துணர்வு அளிக்கும் என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கையாக இன்றளவும் இருக்கிறது.




10 ஆண்டுகள் தடை:


இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவிக்கு காரையார் அணை வழியாக படகு சவாரி மூலமாக சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர். காரையார் அணையில் இருந்து 20 நிமிட படகு சவாரி சென்று அங்கிருந்து 10 நிமிடம் மலையேற்றம் செய்து அருவியை அடையும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து விட்டு மீண்டும் அங்கிருக்கும் படகில் கரை வந்து சேரும் விதமாக அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.


இதற்காக காரையாறு அணையோரம் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் பாதுகாப்பு உள்பட பல்வேறு காரணங்களாலும் வனத்துறையின் நெருக்கடியாலும் சுற்றுலா பயணிகள் பாணத்தீர்த்த அருவிக்கு செல்ல சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் திடீரென தடை விதிக்கப்பட்டது. இதனால் படகு சவாரிக்காக அணையில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து படகுகளும், அணையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இது பயணிகளுக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்தது. இது தொடர்பாக அருவிக்கு செல்ல அனுமதி அளிக்க வலியுறுத்தி வனத்துறைக்கு தொடர்ந்து கோரிக்கைகளும் வைக்கப்பட்டது.




இந்த சூழலில் 10 ஆண்டுகளை கடந்து தற்போது வரும் 18 -ந் தேதி முதல் பாண தீர்த்த அருவியை சுற்றுலா பயணிகள் பார்வையிட மட்டும் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் தரப்பில் கூறுகையில்,, சுற்றுலா பயணிகள் பாணதீர்த்த அருவிக்கு செல்ல நபர் ஒருவருக்கு 500 ரூபாய் செலுத்தி முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் இருந்து இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனம் மூலமாக வாகனத்திற்கு 10 பேர் வீதம் அழைத்து செல்லப்பட உள்ளனர், காலை 8 மணி முதல் மாலை 4 மணிக்குள் முண்டந்துறை வன அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பாணதீர்த்த அருவியை பார்க்கும் வியூ பாயிண்ட் வரை சென்று சுற்றுலா பயணிகளுக்கு காண்பித்து மீண்டும் முண்டந்துறை வன அலுவலகத்தில் கொண்டு வந்து விட்டு விடுவார்கள் என தெரிவித்துள்ளனர்.


அருவியில் குளிக்கத் தடை:


அதேசமயம் அருவிக்கு அருகில் செல்லவோ அருவியில் குளிக்கவோ தொடர்ந்து தடை நீடிக்கிறது. அருவிக்கு அருகில் செல்ல வேண்டுமென்றால் காரையார் அணையை கடந்து தான் செல்ல வேண்டும். எனவே அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டுமென்றால் நிச்சயம் படகு சவாரி தொடங்கினால் மட்டும் தான் சாத்தியமாகும். ஆனால் தற்போது நெல்லை மாவட்டத்தில் நிலவும் வறட்சியால் அணையில் தண்ணீர் மிக குறைவாகவே உள்ளது.


எனவே மாற்று வழியாக சொரிமுத்து அய்யனார் கோயில் வழியாக வனத்துறை வாகனம் மூலம் அருவிக்கு சற்று தொலைவில் அழைத்து சென்று அருவியை காட்ட வனத்துறை திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் அணைகளுக்கு நடுவே படகு சவாரி மூலம் மீண்டும் இயற்கையின் அழகை ரசித்து கொண்டு அருவியை அடையும் விதமாக அனுமதி வழங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கையும் விடுத்துள்ளனர். அதே போல நபர் ஒன்றுக்கு 500  ரூபாய் என்பது அதிகமாக இருப்பதால் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்..