பாளையங்கோட்டையில் 8-வது நூற்றாண்டில் பாண்டியர்கள் காலத்தில் கோட்டை அமைத்து ஆட்சி நடத்தி உள்ளனர். அதன்பிறகு பாளையக்காரர்களும், பின்பு ஆங்கிலேயர்களும் இந்த கோட்டையை நிர்வாக அலுவலகமாகவும், அதன் ஒரு பகுதியை சிறையாகவும் பயன்படுத்தி உள்ளனர்.
பல வரலாற்று சிறப்புகளை கொண்டுள்ள இந்த கோட்டை பழங்கால ஆட்சியின் அடையாளமாக மிஞ்சி நிற்கிறது. இந்த கோட்டை மீது இயங்கி வந்த மேடை காவல் நிலையமும் மூடப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டதால், தற்போது பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.
பாளையங்கோட்டையில் பழங்கால கோட்டை கட்டிடத்தின் கீழ் பகுதியில் மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயில், விநாயகர் கோயில் மற்றும் சில கடைகள் உள்ளன. இந்த பகுதி அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேல் பகுதி வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு மேடை காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. மாவட்ட குற்றப்பிரிவு உள்ளிட்ட சில சிறப்பு பிரிவுகள் இங்கு இயங்கின. அவை இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர், மேல் பகுதி பராமரிப்பின்றி கிடந்தது. இதனால் இந்த கட்டிடம் பாழடைந்து காணப்படுகிறது.
மேடை போலீஸ் ஸ்டேசன்’ பாளையங்கோட்டையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. ‘மேடை தளவாய்’ என்ற பெயர் பொதுவாக திருநெல்வேலி வட்டாரங்களில் பிரசித்தம். அதனோடு பெயர் ஒற்றுமை உடைய இந்த காவல் நிலையம், பாளையங்கோட்டை நகரின் வ.ஊ .சி மைதானம் அருகே கம்பீரமாக காட்சியளிக்கிறது .
இன்று எஞ்சி இருக்கும் கொத்தளத்தின் மேல் சமீப காலம் வரை காவல் நிலையம் இயங்கிக் கொண்டிருந்தது. ஏறத்தாழ முப்பது அடி உயரமுள்ள கோட்டைச் சுவரின் மீதான கொத்தளத்தில் அமையப் பெற்றதால் ‘ மேடை’ என்ற அடைமொழி இந்தக் காவல் நிலையத்தோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. பேராசிரியர் தொ.ப அவர்கள் பாளையங்கோட்டையை ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு கோட்டை நகரமாகத் தனது ‘ பாளையங்கோட்டை- ஒரு மூதூரின் வரலாறு’ என்ற புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். கோட்டையின் அமைப்பு குறித்தும் அதன் எஞ்சிய பகுதிகளின் தற்போதைய நிலை குறித்தும் அந்த நூலில் தொ. ப அவர்கள் அற்புதமாக விவரித்திருக்கின்றார்.
இந்த கோட்டை கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் கோரிக்கை விடுத்தனர்.
மாவட்ட நிர்வாகம் இதன் மீது தனி கவனம் செலுத்தி, கோட்டையின் பழமை மாறாமல் புனரமைத்து நாளைய சந்ததியினருக்கு இந்த தொன்மையை, அடையாளத்தை பாதுகாத்து வழங்கிட சமூக ஆர்வலர்கள் பலர் வலியுறுத்தி வந்த நிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு, கோட்டைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர், “நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பழமை மாறாமல் பாளையங்கோட்டை வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டும் விதமாக கோட்டை புதுப்பிக்கப்படும்” என்றார். மாவட்ட ஆட்சித்தலைவர் கோட்டையை நேரில் சென்று ஆய்வு செய்த நிலையில், தற்போது அங்கு பராமரிப்பு பணிகள் துவங்கி உள்ளது.