தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடங்கள் அருகாமையில் உள்ள மதுக்கடைகள் அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளதாகவும் , மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என்பது எங்கள் முடிவு என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கன்னியாகுமரியில் பேட்டியளித்துள்ளார்.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கன்னியாகுமரியில் தனியார் தங்கும் விடுதிக்கு வந்தார். அவருக்கு கன்னியாகுமரி மாவட்ட திமுகவினர் வரவேற்பு அளித்தனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறும் போது, போதை விழிப்புணர்வு குறித்து தமிழகத்தில் 10 வருடகாலமாக கண்டு கொள்ளாத நிலையில் தற்போது விழிப்புணர்வை மாணவர்களிடம் கொண்டு செல்லும் பணியை தொடர்ந்து வருவதாகவும், தமிழகத்தில் அரசு பள்ளிகூடங்கள் அருகே அமைந்துள்ள மதுக்கடைகள் அகற்றும் பணி துறை ரீதியாக துவங்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் முதற்கட்டமாக மது க்கடை அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளது எனவும், வழிப்பாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்கள் உட்பட மக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள அனைத்து மது கடைகளையும் கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்பது எங்கள் முடிவு எனவும் கூறினார்.

 



 

மேலும்,  “தேர்தல் அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு டேப் கொடுப்பதாக கூறியிருந்த நிலையில், மாணவர்கள் கவனக்குறைவாக பயன்படுத்தினால் டேப் சேதாரம் ஆகும் என்பதை கருதி மீண்டும் மடிக்கணினி கொடுக்க திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆட்சியில் ஒன்றரை லட்சம் லேப்டாப் கொடுக்காமல் விட்டு சென்றுள்ளனர். அதனையும் சேர்த்து கொடுக்கும் நடவடிக்கையில் உள்ளோம். அரசு பள்ளியில் 1 ம் வகுப்பில் இருந்து 5 ம் வகுப்பு வரை புதிதாக 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்” என கூறினார்.