விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக வெள்ளையர்களை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதிகளில் ஒருவராக இருந்த சுந்தரலிங்கம் இறுதியில் தன்னையே மாய்த்துக் கொண்ட வரலாறு ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பே நெல்லை சீமையின் நெற்கட்டும் செவல் பாளையத்தின் மாவீரனாக இருந்த பூலித்தேவன் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டார். வெள்ளையருக்கு எதிரான பல போர்களில் மாமன்னர் பூலித்தேவனுக்கு முதன்மை படைத்தலைவராக இருந்தவர் மாவீரன் ஒண்டி வீரன். 




இவரின் வீரத்தை போற்றும் வகையில் இவருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என கடந்த 2000 ஆம் ஆண்டு முதலே பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது. அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு அப்போதைய தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மூலம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் 50 லட்சம் மதிப்பீட்டில் பாளையங்கோட்டையில் ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு தமிழக முதல்வரால் காணொளி காட்சி மூலம் 2016 மார்ச் இல் திறந்து வைக்கப்பட்டது.  அதன் பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். அதன்படி இந்தாண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு,  நாடாளுமன்ற, சட்டமன்ற  உறுப்பினர்கள் என அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.




பின்னர் அமைச்சர் கூறும் பொழுது, முதல்வர் உத்தரவிற்கிணங்க விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் 251 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்திருக்கிறோம். சுதந்திர போராட்ட வீரர்கள் நிறைந்த மண் நமது நெல்லை சீமை. அந்த சீமைக்கு ஒரு மரியாதை உண்டு என சொன்னால் எதற்கும் துணிந்தவர்களாக, உயிரை துட்சமென மதித்தவர்களாக, சுதந்திர போராட்ட களத்தில் முன்னால் நின்று பணியாற்றியவர்களாக இருந்துள்ளனர், முன்னாள் முதல்வரும்  முத்தமிழ் அறிஞருமான  கலைஞர் சுதந்திர போராட்ட வீரர்களை போற்ற வேண்டும் என்பதற்காக இந்த பகுதியில் பூலித்தேவர், ஒண்டிவீரன், வீரபாண்டிய கட்டபொம்மன், வ உ சி பாரதியார் ஆகியோர்களுக்கு நினைவுச் சின்னங்களை ஏற்படுத்தியுள்ளார் அதேபோன்று தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலினும் அதை வழியை பின்பற்றி சுதந்திர போராட்டக்காரர்களுக்கு மரியாதை செய்கின்றார் என தெரிவித்தார்.




இதனை தொடர்ந்து இந்திய சுதந்திர போராட்டத்தில் அறியப்படாத ஆளுமைகளை  எடுத்துக் கூறும் விதமாக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் மத்திய மக்கள் தொடர்பு சென்னை மண்டல அலுவலகம் சார்பில் இன்று முதல் 10 நாட்கள் நடக்கும்  மாபெரும் கண்காட்சியை   மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன்  தொடங்கி வைத்தார். அதன்பின்னர் மதியம் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவாக தபால் தலையை மத்திய அரசு என்று வெளியிடுகிறது.


நெல்லை KTC நகர் அருகே உள்ள மகராசி மஹாலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமிழக ஆளுநர் ரவி தபால் தலையை வெளியிட புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பெற்றுக்கொள்கிறார். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். கவர்னர்கள், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள், மற்றும் ஒண்டிவீரன் சிலைக்கு பல்வேறு அரசியல் அமைப்பினர் மாலை அணிவிப்பதையொட்டி நெல்லை மாநகரத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.