தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தினமும் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை - மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடியில் உள்ள எரிவாயு தகன மேடை தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

Continues below advertisement

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

Continues below advertisement


கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிவதால் போக்குவரத்து பாதிப்பு, விபத்து ஏற்படுகிறது. இதனால் மாநகராட்சி சார்பில் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்திய பிறகு கோசாலையில் இருந்து மாடுகளை உரிமையாளர்கள் மீண்டும் பெறுகின்றனர். அதன்பிறகும் சாலைகளில் சுற்றித்திரியும் நிலை உள்ளது. இதனால் மாநகர மக்களின் நலன் கருதி மாநகர பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சி சார்பில் பிடிக்கும் போது, உரிமையாளருக்கு தற்போது விதிக்கப்படும் அபராதத்தை விட இருமடங்கு கூடுதலாக அபராதம் விதிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கூட்டத்தில் மாமன்ற திமுக  உறுப்பினர்கள் சிலர் பேசும் போது,  தூத்துக்குடியில் உள்ள எரிவாயு தகன மேடை தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் அங்கு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகையால் எரிவாயு தகன மேடைக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்தையோ அமல்படுத்த வேண்டும்.


குடிநீர் வினியோகம் செய்யும் நேரம் பொதுமக்களுக்கு வாய்ப்பாக உள்ள நேரமாக இருக்க வேண்டும். கூடுதல் குடிநீர் இணைப்பு உள்ள பகுதிகளில் கூடுதல் நேரம் தண்ணீர் வினியோகிக்க வேண்டும்,  சில பகுதிகளில் குடிநீர் திறந்தும் பல மணி நேரம் கழித்தும் தண்ணீர் வராமல் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். தெருவிளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தினமும் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் 30 நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. வல்லநாட்டில் இருந்து தினமும் 60 மில்லியன் லிட்டர் தண்ணீர் மாநகராட்சிக்கு வருகிறது. காலை 4 மணிக்கு குடிநீர் வினியோகம் தொடங்குகிறது. இதில் தெற்கு மண்டலத்தில் உள்ள 9 நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் தினமும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. 9 நீர்த்தேக்க தொட்டிகளில் 2 நாளுக்கு ஒருமுறையும், 5 தொட்டிகளில் 4 நாட்களுக்கு ஒருமுறையும், 7 தொட்டிகளில் 6 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.


இதனை படிப்படியாக குறைத்து அனைத்து பகுதியிலும் தினமும் குடிநீர் வினியோகிப்பதற்கான சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. 40 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து தண்ணீர் கொண்டு வருகிறோம். அதனை வீணாக்காமல் பயன்படுத்துங்கள். இதே போன்று மழைக்காலம் விரைவில் தொடங்க உள்ளது. இந்த காலகட்டத்தில் மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டு உள்ளன. மாநகராட்சி முழுவதும் 2 ஆயிரத்து 500 மின்விளக்குகள் தேவைப்படுகிறது. இதனை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த விளக்குகள் கிடைத்த உடன் மின்விளக்குகள் அமைக்கப்படும் என்றார்.

Continues below advertisement