நேற்று, மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த 4 பேர், ராமநாதபுரம் மாவட்ட இளஞ்சிறார் நீதி குழுமம் முன்பு கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகி விட்டு, ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தில் செல்லும்போது, பரமக்குடி அருகே கமுதக்குடி பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்து மர்ம நபர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்களை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த நான்கு பேரில்  அழகு முருகன் என்ற இளைஞர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.


ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை பரமக்குடி அருகே வெள்ளிக்கிழமை காரில் வழிமறித்த மா்மக் கும்பல், கொலை வழக்கில் ஆஜராகிவிட்டுத் திரும்பிய 4 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அரியமங்கலத்தில் கடந்த 2019-இல் மணிகண்டன் என்பவா் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கில் மதுரை அனுப்பானடி பகுதியைச் சோ்ந்த பழனிக்குமாா் (21), வழிவிட்டான் (18), அழகுமுருகன் (18), முத்துமுருகன் (19) ஆகிய 4 பேரும் குற்றவாளிகளாக சோ்க்கப்பட்டுள்ளனா். இந்த 4 பேருடன் பழனிக்குமாரின் தந்தை தா்மலிங்கம் என 5 போ், இந்த வழக்குத் தொடா்பாக ராமநாதபுரம் மாவட்டம் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் நேரில் சென்று ஆஜராகி கையொப்பமிட்ட பிறகு மதுரைக்கு அரசுப் பேருந்தில் திரும்பியுள்ளனா். இந்த பேருந்தை காா் ஒன்றில் பின்தொடா்ந்து வந்த மா்மக் கும்பல், பரமக்குடி அருகேயுள்ள தெளிச்சாத்தநல்லூா் பகுதியில் மறித்துள்ளது. அப்போது அப்பேருந்தின் ஓட்டுநா் தவமணி பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளாா்.




விடாமல் காரில் துரத்திய அந்த கும்பல் கமுதக்குடி- சுந்தனேந்தல் பகுதியில் பேருந்தை வழிமறித்து நிறுத்தியது. அரிவாள் மற்றும் கத்தியுடன் பேருந்தில் ஏறிய அக்கும்பல், கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு திரும்பிய 4 பேரையும் சரமாரியாக வெட்டியது. அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினா். பின்னா், பேருந்தில் இருந்து இறங்கிய அக்கும்பல் காரில் தப்பிச் சென்றது. இதில் படுகாயமடைந்த பழனிக்குமாா், அழகுமுருகன், வழிவிட்டான், முத்துமுருகன் ஆகிய 4 பேரையும் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு நபர்களில் 'அழகு முருகன்' என்ற இளைஞர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.




இந்த நிலையில், நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் வேல்முருகன் விசாரணை நடத்தி வருகிறாா். இச்சம்பவம் தொடா்பாக பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். பட்டப்பகலில் ஓடும் பேருந்தில் கொலைக் குற்றவாளிகளை வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பெருநாளி பகுதியில் இருந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வாதாரம் தேடி மதுரைக்கு சென்றவர்கள், தொழில் போட்டி காரணமாக இரு பிரிவுகளாக பிரிந்து பெரும் பகைவர்களாக மாறிவிட்டனர்.  இதில்,ஒரு தரப்பினருக்கும் மற்ற தரப்பினருக்கும் இடையே  பழிவாங்கும் படலம் தொடர்ந்து  நடக்கிறது. அதில் இது 17ஆவது கொலை என   தெரிவித்தனர். மேலும், அடுத்தடுத்த கொலைகள் இருதரப்பிலும் நடந்தாலும் கூட எதிரிகளை எப்போதும் பயத்தில் வைத்திருக்கவேண்டும் என்ற நோக்கமே இருதரப்புக்கும் இருந்து வருகிறது, அவ்வாறு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அடிக்கடி கொலைகளும் நடக்கிறது. அதில் இந்தக்கொலையும் ஒன்று எனக் கூறப்படுறது.