OLX மூலம் பலரிடம் பணம் பறித்த நபரை கண்ணி வைத்து பிடித்த சைபர் கிரைம் போலீஸ்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் OLX மூலம் வேலைவாய்ப்பு விளம்பரம் செய்து பலரை ஏமாற்றிய நபரை சைபர்கிரைம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் பழைய மற்றும் புதிய பொருட்களை விற்பனை செய்ய பல ஆப்களும் வெப்சைட்களும் தாராளமாக உள்ளது. இதில் olx என்னும் ஆன்லைன் விற்பனை ஆப் மிகவும் பிரபலம், இந்த தளம் மூலம் பல இடங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக விளம்பரம் செய்து, அதனை நம்பி பணம் இழந்துள்ளதாகவும், போலியாக விளம்பரம் செய்து பணத்தை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு கன்னியாகுமரி சைபர்கிரைம் போலீசாருக்கு நான்கிற்கும் மேற்பட்ட புகார்கள் வந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் மோசடி ஆசாமி குறித்து விசாரணையில் இறங்கினர். அதன் அடிப்படையில் தொலைபேசி எண்களை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நபர் என்பது தெரியவந்தது இதனை தொடர்ந்து கன்னியாகுமரி சைபர்கிரைம் போலீசார் அந்த நபர் பயன்படுத்திய செல்போன் எண்ணை டிராக் செய்ய அவர் கன்னியாகுமரி மாவட்டம் நடைக்காவு பகுதியை சுரேஷ் (41) என்பதும், பி.ஏ., பட்டதாரியான இவர் நாகர்கோவிலில் தனியார் பேருந்துகள் புக்கிங் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது, தொடர்ந்து சுரேஷை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன ,இவர் குமரி மாவட்டம் அல்லாது பல மாவட்டங்களை சேர்ந்த பலரையும் ஏமாற்றியதை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதால் வேலை கிடைக்காமல் விரக்தியில் இருக்கும் நபர்களை எளிதாக ஏமாற்ற எண்ணிய சுரேஷ் அதற்கான ஆயுதமாக olx ஐ பயன்படுத்தியுள்ளார். OLX மூலம் இஸ்ரோ உட்பட பல அரசு வேலைகளுக்கு ஆட்கள் தேவை என போலியாக பல விளம்பரங்கள் பதிவு செய்துள்ளார். இதில் ஒவ்வொரு விளம்பரத்திலும் ஒவ்வொரு தொடர்பு எண்களை பயன்படுத்தியுள்ளார். ஒருவரை ஏமாற்றி பணம் பறித்த பின் அந்த எண்ணை ஆப் செய்து விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இவரிடம் பணம் இழந்த நபர்கள் அனைவரும் படித்த பட்டதாரிகள் தான் ஒரு விளம்பரம் உண்மையா அல்லது போலியா என்பதை கூட யோசிக்காமல் பலரும் பணத்தை வழங்கி உள்ளனர்.ஏமாந்த நபர்கள் பணத்தை வங்கி கணக்கில் கொடுத்ததால் சுரேஷ் குறித்த விவரங்களை உடனடியாக கண்டிபிடித்து அவரை கைது செய்ய முடிந்தது.ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி சம்பந்தமாக சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்ச்சியாக மாவட்ட காவல்துறை சார்பில் பல நேரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இதுபோன்று பணத்தை கொடுத்து ஏமாறுபவர்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.