நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், மளிகை பொருட்கள் காய்கறிகள், சமையல் எண்ணெய், கேஸ் சிலிண்டர் என அனைத்தும் கடுமையான விலையேற்றம் கண்டுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.  இந்த சூழலில் விலையேற்றம் என்பது  பொருளாதார சிக்கலில் உள்ள நடுத்தர மக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா காலத்தில் வருவாய்குறைவால் வேறு வழியின்றி 50 சதவீதம் பேர் கடனாளியாகி தள்ளப்பட்டு உள்ளனர்.



மேலும் சமையல் எண்ணெய் விலை கடந்த ஓராண்டில் இருமடங்காக உயர்த்தப்பட்டிருப்பது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என அத்தியாவசிய பொருட்கள் அனைத்து பல மடங்கு விலை உயர்ந்து உள்ளது. தற்போது காய்கறிகள் விலையும் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு மக்கள் விரோத போக்குடன் செயல்படுகிறது என கூறி அதனை கண்டிக்கும் வகையிலும், அதை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் விதமாகவும் விழிப்புணர்வு பிரச்சார பயணம் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார்.


அதன் ஒருபகுதியாக நெல்லை மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று நடைபெற்றது, அதன்படி பாளையங்கோட்டை அருங்காட்சியகத்தில் தொடங்கிய பேரணி முக்கிய பகுதிகள் வழியாக பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே நிறைவு பெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்,  இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஒன்றிய அரசுக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர், பேரணியில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




பேரணி குறித்து ஸ்ரீவல்ல பிரசாத் கூறுகையில், இது பெட்ரோல் டீசலுக்கான போராட்டம் மட்டுமல்ல. உணவு பொருள் கேஸ் சிலிண்டர் என பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு மக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு அதானி, அம்பானி போன்றோருக்கு ஆதரவாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை கண்டித்து தான் இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது, தொடர்ந்து தமிழகத்தில் வரும் 29 ஆம் தேதி வரை தொடர் விழிப்புணர்வு பேரணி நடத்த உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.