தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான மாவட்ட அளவிலான உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு காய்கறிகளால் உருவாக்கப்பட்ட விளக்கினை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார், அதனை தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுவினர் காட்சிப்படுத்தி இருந்த உணவு வகைகளையும் நேரில் பார்வையிட்டார்
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டுள்ளவர்கள் ஏற்கனவே ஊராட்சி அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற முதல் மூன்று இடத்தை பெற்ற 27 மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு தனித்தனியே தலைப்புகள் வழங்கப்பட்டு உணவுகளை காட்சிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர், அதன்படி பாரம்பரியமிக்க உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து உணவு வகைகள், சிறுதானிய உணவு வகைகள் , இயற்கை மூலிகைச் சாறுகள் மற்றும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை காட்சிப்படுத்தி இருந்தனர் . மேலும் இந்த போட்டியில் ரத்தசோகை, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ,உடல் எடை குறைபாடு மற்றும் அதிகரித்தல் நோய்களுக்கான பாரம்பரியமிக்க உணவுகள் மூலம் தீர்வு காணும் வழிவகைகளையும் எடுத்துரைத்தனர்.
பின்னர் இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்ய நியமிக்கப்பட்ட தேர்வு குழுவினர் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்களின் சுத்தம் சுகாதாரம் மற்றும் சுவை ஆகியவைகளை கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கியதோடு காட்சிபடுத்தப் பட்டிருந்த பொருட்களை அக்குழுவினர் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கும் மதிப்பெண்கள் வழங்குகின்றனர்.
இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் குழுவினருக்கு ரொக்கப் பரிசுகளும் சிறந்த முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இரண்டு குழுக்களுக்கு ரொக்கப் பரிசுடன் கூடிய சான்றிதழ்களையும் வழங்கினர், இந்த போட்டிகளில் வெற்றி பெறும் முதல் மூன்று குழுவினர் மார்ச் 8-ஆம் தேதி சென்னையில் நடைபெறக்கூடிய மாநில அளவிலான மகளிர் தின நிகழ்ச்சி போட்டியில் கலந்து கொண்டு பாரம்பரிய உணவு வகைகளை காட்சிப்படுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.