நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 17 பேரூராட்சி தேர்தலில் 15 இடங்களை திமுக கைப்பற்றிய நிலையில் திசையன்விளை மற்றும் திருக்குறுங்குடி பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது, இதில்  திசையன்விளை பேரூராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் தலா 9 ஓட்டுகளை பெற்றனர், அப்பொழுது குலுக்கல் முறையில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த குலுக்கலில் பேரூராட்சி ஊழியரை வைத்து சீட்டை எடுத்து தலைவர் அறிவிக்கப்பட்டது, இது  விதிமுறைக்கு சரியானது அல்ல என்றும், குலுக்கல் சீட்டை எடுத்தவர் அதிமுவை சேர்ந்தவர் என்பதால் நேர்மையாக தலைவர் தேர்வு நடைபெறவில்லை என கூறி நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், இராதாபுரம் ஒன்றிய கழக பொறுப்பாளருமான VSR  ஜெகதீஷ் தலைமையில் திமுக கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலரை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களோடு காவல்துறை உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 




இந்த சூழலில் உள்ளே அதிமுகவினரை அனுமதிக்காததால் திசையன்விளை உடன்குடி சாலையில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளி முன்பு திருச்செந்தூர் உடன்குடி சாலையில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர், குறிப்பாக திசையன்விளை பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் 9 பேருக்கு பாதுகாப்பு இல்லை என கூறி மாவட்ட நிர்வாகம் மற்றும் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்த நிலையில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது,  இந்த சூழலில் அதிமுக கவுன்சிலர்களாகிய எங்களுக்கு காவல்துறை போதிய பாதுகாப்பு தரவில்லை என்று கூறி அதிமுகவினர் ஒரு புறம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், திமுக மற்றும் அதிமுகவினர் என இருதரப்பினரும் போராட்டம் நடத்தி வரும் சூழலில் திசையன்விளை பேரூராட்சி பகுதி பரபரப்பாக காணப்பட்டது,




ஆரம்பம் முதலே திசையன்விளை பேரூராட்சியில் அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில் அதிமுகவினரை திமுகவினர் மிரட்டுவதாக அதிமுக மாவட்ட கழக செயலாளர் ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார், அதன் பின்னர் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவை சேர்ந்த லிவ்யா என்பவரின் குடும்பத்தினரை திமுகவினர் மிரட்டுவதாக லிவ்யாவின் கணவர் சக்திவேல் குமார் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்,  திசையன்விளை பேரூராட்சியை அதிமுக கைப்பற்றும் சூழல் இருந்து வந்தது, இதனை திமுக கைப்பற்ற  தீவிர  முனைப்பு காட்டி வந்தது, இந்த சூழலில் தான் இன்று பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுக்க அதிமுகவை சேர்ந்த பெண் ஒருவரிடம் திமுக ஒன்றிய செயலாளார் பேரம் பேசும் ஆடியோ சமூக வலைதலங்களில் வெளியாக மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



திசையன்விளை பேரூராட்சி 9 ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு உமா என்பவர் வெற்றி பெற்றிருந்தார், இவரிடம் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், இராதாபுரம் ஒன்றிய கழக பொறுப்பாளருமான VSR  ஜெகதீஷ் என்பவர் பேரம் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது, அதில் அவர் கூறும் பொழுது, இது போன்ற வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது, உங்களை  நான் துணை தலைவராக்கி விடுகிறேன், குறைந்தது 40 முதல் 50 லட்சம் வரை பணம் தருகிறேன், இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது, கட்சியிலும் நல்ல பதவி வாங்கி தருகிறேன் என்று கூறுகிறார், அப்போது குறுக்கிட்டு பேசும் உமா 9 ஆவது வார்டில் நான் போட்டியின்றி தேர்வாகி இருப்பேன் அதனை நீங்கள் தான் கெடுத்தது நீங்கள் தான் என்று கூறுகிறார்.


மீண்டும் VSR ஜெகதீஸ் பேசும் பொழுது ஒரு கட்சியின் ஒன்றிய செயலாளர், நான் ஒரு கட்சியின் இயக்கத்தை நடத்துபவன், எனக்கும் நகர செயலாளருக்கும் ஒரு சில பிரச்சினைகள், நகர செயலாளர் சில தவறுகளை செய்யும் பொழுது, வெளி மட்டத்தில் அன்னபோஸ்டில் ஒரு அதிமுகவினர் வந்தால் பதில் நான் தான் சொல்ல வேண்டும், இதனை புரிந்து கொள்ள வேண்டும் என கூறுகிறார், மீண்டும் குறுக்கிட்ட உமா உங்கள் கட்சி வேட்பாளரை தானே நீங்கள் தலைவராக அறிவிக்க வேண்டும், எதற்காக சுயேச்சையை அறிவிக்கிறீர்கள் என கேட்கிறார். இதனை நாங்கள், சபாநயகர் என அனைவரும் பேசி முடிவு செய்து தான் இருந்தோம் என உரையாடல் நீண்டு கொண்டே செல்கிறது.  ஒரு கட்டத்தில் பணம் இன்று வரும் நாளை போகும் பணத்திற்காக மாறினால் நாளை தெருவிற்குள் தலை காட்ட முடியாது. பணத்திற்காக மாற முடியாது என தெரிவிக்கிறார். சரி நீங்கள் முடிவு செய்யுங்கள் என VSR ஜெகதீஸ் கூறும் உரையாடல் முடிகிறது.