தாமிரபரணி முகத்துவாரத்தில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை சார்பில் வளர்க்கப்பட்டு வரும் அலையாத்தி காடுகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் படகில் சென்று ஆய்வு 


                                         

 

தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரங்கள் பழையகாயல் மற்றும் புன்னக்காயல் பகுதியில் உள்ளன. இந்த பகுதிகளில் அலையாத்தி காடுகள் சுமார் 800 ஹெக்டேர் பரப்பில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த அலையாத்தி காடுகள் சுனாமி மற்றும் கடல் அரிப்பை தடுக்க கூடியது. கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது கூட கடலுக்கும், தாமிரபரணி ஆற்று முகத்துவாரத்துக்கும் அருகில் இருக்கும் புன்னகாயல், பழையகாயல் பகுதிகளை அரணாக அலையாத்தி காடுகள் இருந்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் அலையாத்தி காடுகள்  மீன்களின் இனப்பெருக்கத்துக்கு பெரிதும் உதவுகிறது. நண்டு, இறால் போன்றவை அதிக அளவில் வாழும் இடமாக இந்த அலையாத்தி காடுகள் அமைந்து உள்ளதுடன்  பறவைகளின் வாழிடமாகவும் விளங்குகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்துக்காக இந்த அலையாத்தி காடுகளுக்கு வந்து செல்கின்றன.



 

இத்தகைய புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த அலையாத்தி காடுகளை பெருக்கும் முயற்சியில் மன்னார் வளைகுடாவைச் சேர்ந்த வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அலையாத்தி காடுகளில் இருந்து சுமார் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை விதைகளை சேகரிக்கின்றனர். மழை காலங்களில் அலையாத்தி காடுகளில் பூ பூக்கும் அதனை தொடர்ந்து அலையாத்தி விதைகளை சேகரிக்கின்றனர். அந்த விதைகளை முகத்துவாரத்தில் இருந்து சிறிய வாய்க்கால்களை வெட்டி தண்ணீர் கொண்டு சென்று அருகில் உள்ள பகுதிகளில் விதைகளை விதைத்து செடிகளை வளர்த்து வருகின்றனர். இந்த பகுதியில் அவினிசியா மெரைனா என்ற அலையாத்தி காடுகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 ஹெக்டர் வரை அலையாத்தி காடுகள் மன்னார் வளைகுடா வனத்துறையினரால் உருவாக்கப்பட்டு வருகின்றன.



 

இந்த காடு வளர்ப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் டோமர் ஆகியோர் பழையகாயல் தாமிரபரணி முகத்துவாரத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்து படகில் கடலுக்குள் சென்றனர். அங்கிருந்து கரையோரமாக வளர்க்கப்பட்டு வரும் அலையாத்தி காடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதே போன்று பைனாகுலர் மூலம் காடுகளில் உள்ள பறவைகளையும் பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து அலையாத்தி காடுகளின் பரப்பை அதிகரிக்கவும் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும் ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.