தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டத்தின் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆனித் தேரோட்டம் 40 நாட்கள் நடைபெறும் பெருந்திருவிழா என பெயர் பெற்றது. ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர்களும், சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தின் போது ரத வீதிகளில் வலம் வரும்.  இந்த தேர் கடந்த 1505 ஆம் ஆண்டு செய்யப்பட்டது. திருவாரூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் தேர் இயந்திரங்களின் துணையுடன் இயக்கப்படும் நிலையில் அதற்கு அடுத்தப்படியாக 3 வது பெரிய தேரான  நெல்லையப்பர் கோவில் தேர் முழுக்க முழுக்க மக்கள் சக்தியால் மட்டுமே இயக்கப்படுகிறது. 




சுமார் 450 டன் எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் திருத்தேர் 70 அடி உயரம் கொண்டது. இந்த தேர் ஒவ்வொரு வருடமும் சறுக்குக் கட்டை போடுதல், தடி போடுதல் ஆகியவற்றின் மூலம் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், பெரியோர்கள் என அனைவரும் ஓம் நமச்சிவாய உள்ளிட்ட கோசங்களுடன் இழுக்கும் போது தேர் மக்கள் வெள்ள கூட்டத்தில் ஆடி அசைந்து வருவதை காண கண்கோடி வேண்டும். இந்த நிலையில் இந்தாண்டு ஆனிப்பெருந்திருவிழாவான தேரோட்ட திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 518வது ஆனி தேரோட்டம் 21 ம் தேதி இன்று காலை துவங்கியது.


அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவில் ஆனித் தேரோட்டத்தினை, மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ருஸ், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையாளர்,  துணை மேயர் அவர்கள் மற்றும்  முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் ஆகியோர் தேரினை வடம் பிடித்து துவக்கினர். காலை 7.18 க்கு தேரானது இழுக்க துவங்கியம் துவங்கிய  ஒரு சில நிமிடங்களிலேயே தேரின் வடமானது அறுந்து விழுந்தது. 4 வடங்களில் 3 வடங்கள் அறுந்து விழுந்த நிலையில் அதனை சரிசெய்யும் பணி துவங்கியது. சரி செய்து மீண்டும் தேர் இழுக்கத்துவங்கியதும் இரண்டாவது முறையாக மீண்டும் அறுந்தது. பின் மாற்று வடம் கொண்டு வரப்பட்டு மூன்றாவது முறையாக தேர் நகரத்தொடங்கிய சற்று நேரத்திலேயே மூன்றாவது முறையாக தேர் வடமானது அறுந்தது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனையடைந்தனர். ”நெல்லையப்பா என்ன சோதனை இது” என புலம்பிய படி மக்கள் வேதனை தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது மாற்று முயற்சியாக இரும்பு சங்கிலி மாற்றப்பட்டு தேர் இழுக்கப்பட்டு வருகிறது. 




இது குறித்து பக்தர் ஒருவர் கூறும் பொழுது, இருப்பது 4 வடம் அதில் 3 வடம் அறுந்து விட்டது. தொடங்கி 1 அடி கூட நகரவில்லை அறுந்து விட்டது. இது எவ்வளவு பெரிய அபசகுணம். 518 வருடத்தில் ஒரு வருடம் கூட இப்படி நடந்தது கிடையாது. இந்துசமய அற நிலையத்துறையின் மிகப்பெரிய செயல் குறைபாடு தான் காரணம்.  வடத்தை மாற்றுங்கள் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். அதை கண்டுகொள்ளவே இல்லை. இவர்கள் என்ன திருவிழா  நடத்துகின்றனர். உண்டியல் வைத்து வசூல் செய்கின்றனர் என்று மிகுந்த ஆக்ரோஷத்துடன் குற்றச்சாட்டை முன்வைத்தார்.