தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருகே உள்ள ஆயிரப்பேரி பகுதியே சேர்ந்தவர் கோபிநாத். இவர் பழைய குற்றாலம் பகுதியில் கார் பார்க்கிங் நிலத்தை குத்தகை எடுத்து தொழில் செய்து வருகிறார். அதே போன்று ஆயிரப்பேரி பகுதியில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து நான்கு தலைமுறையாக நிர்வாகித்தும் வருகிறார். இந்த நிலையில் அவருக்கு சொந்தமான ஓர் இடத்தில் பஞ்சாயத்து கழிவுநீர் தேங்கி கிடந்துள்ளது. இதனால் அருகில் இருந்த மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் இருந்துள்ளது. மின்கம்பம் கீழே விழுந்து விபத்து ஏற்படும் முன் அதனை சரிசெய்ய வேண்டும் என அதனை சரிசெய்ய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை சுற்றி மண்ணை நிரப்பி அதனை சமப்படுத்தியதாக தெரிகிறது. அப்போது அங்கிருந்த பஞ்சாயத்து தலைவர் சுடலையாண்டி என்பவர் எப்படி இந்த இடத்தில் நீங்கள் மின்கம்பத்தை சுற்றி சரி செய்யலாம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது திடீரென அந்த வழியாக பஞ்சாயத்து தலைவரின் மருமகன் மற்றும் மகன் வந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து கோபிநாத்தின் தலையில் பலமாக தாக்கியதாக தெரிகிறது. கோபிநாத்தின் உடனிருந்த அவரது வழக்கறிஞரையும் தலையில் பலமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக குற்றாலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து கோபிநாத்தின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், ஒரு வழக்கு விசயமாக அவரை சந்திக்க சென்றேன். ஆயிரப்பேரியில் கோவில் நிலத்தை குத்தகை எடுத்து பராமரித்து வருகின்றார். அந்த இடத்தில் பஞ்சாயத்து தலைவரின் உள் நோக்கத்துடன் ஊரின் கழிவு நீர் அனைத்தையும் அப்பகுதியில் விடுகின்றனர். அது கோவில் சொத்து அதனை பராமரிக்க வேண்டும் என கோபிநாத் ஏற்கனவே தென்காசி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது. மீண்டும் அதே இடத்தில் கழிவு நீரை திறந்து விடுவதால் அங்குள்ள மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. பெரிய ஆபத்து ஏற்படும் நிலையில் அதனை சரிசெய்ய பிடிஓ விடம் அனுமதி பெற்று அதனை மண் நிரப்பிக் கொண்டிருந்தோம். அப்போது அந்த இடத்திற்கு வந்த பஞ்சாயத்து தலைவர் தகாத வார்த்தையில் பேசி பிரச்சினை செய்ததோடு அவருடைய மருமகனுக்கு தொடர்பு கொண்டு வரச்சொல்லி காரில் இருந்து கம்பியை எடுத்து வந்து தாக்கினர். இருவருக்கும் அதில் பலத்த காயம் ஏற்பட்டது. ஊராட்சி மன்றத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் இவர்கள் தான் காரணமாக இருக்கின்றனர். இவர்கள் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பஞ்சாயத்து தலைவர், அவரது மருமகன் மற்றும் மகன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து இருவரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.