நெல்லை வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ளது திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட அரசு ஆசிரியர் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்க கட்டிடம். இந்த கட்டிடத்தில் நேற்று முன் தினம் அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் இந்த விபத்தில் சில ஆவணங்கள் மட்டும் தீயில் எரிந்து கருகியது. இதற்கிடையில் இந்த தீ விபத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சங்கத்தின் செயலாளர் மந்திரமூர்த்தி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Continues below advertisement


 



அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சங்க தலைவரே தனது மோசடியை மறைக்க ஊழியரை அனுப்பி ஆவணங்களை தீ வைத்து எரித்தது அம்பலமாகியுள்ளது. அதாவது இந்த சங்கத்தின் தலைவராக பிரபாகரன் என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபாகரன் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு முறைகேடாக 12 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். மேலும் தனக்கு வேண்டப்பட்ட தினேஷ் என்பவரிடம் 3 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு அவரை தற்காலிக எழுத்தராக பணி அமர்த்தியுள்ளார். எனவே பிரபாகரன் செய்யும் பல்வேறு முறைகேடுகளுக்கு தினேஷ் உடந்தையாக இருந்துள்ளார். இந்த நிலையில் விரைவில் இந்த சங்கத்தில் ஆடிட்டிங் நடைபெற இருப்பதால், தான் சங்கத்தில் மோசடி செய்த விவகாரம் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் சங்கத்தில் உள்ள நிதி வைப்பு தொடர்பான ஆவணங்களை தீ வைத்து எரித்து விடும்படி தினேஷிடம் பிரபாகரன் கூறியுள்ளார். அதன் பெயரில் சம்பவத்தன்று நள்ளிரவு தினேஷ் சங்க அலுவலகத்துக்கு சென்று ஆவணங்களை தீ வைத்து எரித்துள்ளார்.






ஏற்கனவே தினேஷ் மற்றும் பிரபாகரன் மீது பிற நிர்வாகிகள் சந்தேகத்தில் இருந்துள்ளனர். அதன் பேரில் போலீசார் தினேஷை பிடித்து விசாரித்ததோடு அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது தலைவர் பிரபாகரன் தான் ஆவணங்களை தீவைத்து எரிக்கும்படி கூறியதாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பாளையங்கோட்டை காவல்துறையினர் இது குறித்து அரசு பொருட்களை எரித்து சேதப்படுத்துதல் ( சட்டப்பிரிவு 436 ) என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தினேஷ் மற்றும் பிரபாகர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அரசு கூட்டுறவு சங்கத்தில் தலைவரே லட்சக்கணக்கில் மோசடி செய்துவிட்டு அதை மறைக்க தீ விபத்து நாடகம் ஆடியது நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.