கேரளாவில் ஓண பண்டிகை கொண்டாட்டத்திற்காக மதுபான பாட்டில்களில் போலி ஸ்டிக்கர் ஒட்டி கள்ளசாராயம் கலந்து விற்பனை செய்ய திட்டம் தீட்டிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை போலவே கேரளாவிலும் பண்டிகை காலங்களில் அதிக அளவில் மதுபானம் விற்பனை நடைபெறும். தற்போது கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் துவங்கி உள்ள நிலையில் இதனை பயன்படுத்தி போலி மதுபானம் விற்பனை என்பது அதிகரித்துள்ளது. இதற்காக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து போலி மதுபான வகைகள் மற்றும் கள்ள சாராயம் கடத்தும் கும்பல்கள் முழு வீச்சில் செயல்பட துவங்கி உள்ளது. இங்கு உள்ள கள்ளசாராயதில் கலர் பொடி போட்டு ,போலி மதுபான ஸ்டிக்கர் ஒட்டி அதனை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வதை சில கும்பல் வாடிக்கையாக செய்து வருகிறார்கள்.
இதனை தடுக்க இரு மாநில போலீசாரும் தங்கள் எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது வழக்கம். இருந்த போதிலும் போலீஸ் கண்ணில் மண்ணை தூவிவிட்டு கடத்தல் என்பது நடந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கள்ள சாராயத்தை மது பானங்களை போன்று மது பான பாட்டில்களில் அடைத்து தமிழகத்தில் இருந்து கேரள கடத்தும் கும்பல் குறித்து மார்தாண்டம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்வேல் க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் மார்த்தாண்டம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மினி லாரி ஒன்று வேயப்பட்ட தென்னை ஓலைகளை ஏற்றி வந்த வாகனத்தை சோதனை செய்த நேரத்தில் அந்த வாகனத்தில் பிளாஸ்டிக் கேன்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் இருந்ததை கண்டு விசாரணை நடத்திய போது அந்த பிளாஸ்டிக் கேன்களில் எரிசாராயம் இருப்பதை கண்டு பிடித்தனர்.
தொடர்ந்து அந்த வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் விசாரித்து வாகனத்தை சோதனை செய்த போது மதுபான வகைகளின் ஸ்டிக்கர் , மதுபாட்டில்கள் , கேன்களில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்தனர். தொடர்ந்து பாலராமபுரம் பகுதியை சேர்ந்த ஓட்டுனர் அல்லமீன் மற்றும் உடன் வந்தவரை பிடித்து இது எங்கு தயார் செய்யப்பட்டது. யார், யாருக்கு இதில் தொடர்புடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஓணம் பண்டிகை கொண்டாட்ட நேரத்தில் போலி மதுபானங்களை கேரளாவில் புழக்கத்தில் விட்டு சம்பாதிக்க தமிழகத்தில் இருந்து கடத்தி கொண்டு செல்ல திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.மேலும் இவர்கள் பின்னணியில் பெரிய கும்பல் இருக்கலாம் என்பதால் அவர்கள் குறித்தும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.