நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்டின் ராயன். இவர் மாநகரில் விதிமீறி கட்டப்படும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போராட்டங்கள் மற்றும் நீதிமன்றம் மூலம் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்தில் உள்ள நான்கு தனியார் மருத்துவமனைகள் விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டியிருப்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தச்சநல்லூர் மண்டல துணை ஆணையரிடம் பதில் கேட்டு மனு அனுப்பியுள்ளார். அதற்கு, நான்கு மருத்துவமனைகளிலும் விதிமீறல் இருப்பதாகவும், அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடந்த 2021 ஆம் ஆண்டு உதவி ஆணையர் பதில் கொடுத்துள்ளனர்.


ஆனால் பதில் கொடுத்து பதினொறு மாதங்கள் ஆகியும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்காததால் சில தினங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனைகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மீண்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் பெர்டின்ராயன் தகவல் கோரியுள்ளார். அதற்கு பதில் அளித்த உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கோருவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொருந்தாது என்பதால் தகவல் இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் மாநகராட்சி மீது தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக இன்று கருப்பு ஆடை அணிந்து கொண்டு திருநெல்வேலி மாநகராட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தார் பின்னர் அங்கிருந்த தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையர் அலுவலகம் முன்பு தனக்கு வழங்கப்பட்டுள்ள  தகவல் அடங்கிய பேப்பரை வைத்து அதற்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தினார். பதில் கிடைக்காத மனு செத்து போனதாக கருதி அடக்கம் செய்யும் வகையில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.




மேலும் திடீரென கருப்பு சட்டையுடன் வந்து பேப்பருக்கு மாலை அணிவித்த சம்பவத்தை பார்த்து அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வேடிக்கையுடன் பார்த்தனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் கூறும்போது, நான் நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்தில் நான்கு தனியார் மருத்துவமனைகளில் விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு நடவடிக்கை எடுப்பேன் என உதவி ஆணையர் தெரிவித்தார். அதன் பிறகு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இது தொடர்பாக மீண்டும் மனு அளித்தபோது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இது பொருந்தாது தகவல் இல்லை என தகவல் அளித்த அதிகாரியை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்திற்குள் அந்த தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அறிக்கையை வைத்து அஞ்சலி செலுத்துகிறேன். இதுபோல தவறான தகவலை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் வழங்கிக் வருகின்றனர். இந்த நான்கு மருத்துவமனைகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள் என்பதில் குழப்பமாக இருக்கிறது என தெரிவித்தார்.. இந்த நூதன போராட்டத்தால் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.











மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண