முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து திருநெல்வேலியில் பொருநை இலக்கியத் திருவிழா வரும் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இது தொடர்பான லோகோவை ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி மற்றும் பயிற்சி உதவி ஆட்சியர் கோகுல் ஆகியோர் இணைந்து வெளியிட்டன. தொடர்ந்து இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறும் போது, "தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் சென்னை மற்றும் வைகை, காவேரி, சிறுவானி, பொருநை ஆகிய ஐந்து இலக்கிய திருவிழாக்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் முதல் திருவிழாவாக நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா வரும் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இந்த பொருநை திருவிழாவில் தனித் தனியாக மொத்தம் ஐந்து அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. அதன்படி நேருஜி அரங்கத்தில் இலக்கியவாதிகளின் சிறப்புரைகள் மற்றும் கலந்துரையாடல்கள், நூற்றாண்டு மண்டபத்தில் மண்வாசனை என்ற தலைப்பில் வட்டார இலக்கிய உரையாடல்கள், அதன் பின் வ.உ.சி அரங்கில் கவிதை பொழிவு, பிபிஎல் திருமண மண்டபத்தில் எழுத்தாளர் வாசக சங்கமம், பாளையங்கோட்டை மேற்கு கோட்டை வாசலில் திரை மொழி ஆகிய ஐந்து அரங்குகளில் திருவிழா நடைபெறும். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்த உள்ளன.
இதுகுறித்து அந்தந்த பள்ளி கல்லூரி நிர்வாகத்தினரிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். இலக்கிய திருவிழாவில் சிறப்பினங்களாக ஓலைச்சுவடி வடிவிலான இலக்கியங்கள், மூலப்புதகங்கள் மற்றும் நாட்டுப்புற கலை பொருட்கள் ஆகியவற்றை சேகரித்து காட்சிப்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே நெல்லை புத்தக திருவிழாவில் கலை பொருட்கள் காட்சிப்படுத்தியிருந்தோம். அது நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே பொதுமக்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் தங்களிடம் ஓலைச்சுவடி , நாட்டுப்புற கலை பொருட்கள் இருப்பின் வரும் 24ம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலரிடம் வழங்கலாம்" என தெரிவித்தார்.
மேலும்,"பொருநை இலக்கிய திருவிழா தொடர்பான லோகோ இன்று வெளியிடப்படுகிறது. https://porunailitfest.in/ என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இதில் இலக்கிய திருவிழாவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் மண்டல அளவில் நெல்லை தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து இத்திருவிழா நடக்கிறது. நெல்லையில் காணி மக்கள் மத்தியில் இருக்க கூடிய மருத்துவம் சார்ந்த விஷயங்களை டிஜிட்டல் மையம் ஆக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்தார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்