தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.11 கோடி மதிப்பிலான திமிங்கலங்கள் உமிழக்கூடிய அம்பர்கிரிஸ் என்ற மெழுகுப்பொருளை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
குலசேகரன்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் ராஜன் தலைமையிலான போலீசார் உடன்குடி- வில்லிகுடியிருப்பு சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீஸார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் மூன்று நபர்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து காரை முழுமையாக சோதனை செய்தனர். அப்போது காரில் மூன்று பாலித்தீன் பைகளில் மெழுகு போன்ற பொருள் இருந்தது. இதனை பரிசோதித்து பார்த்த போது அது திமிங்கலங்கள் உமிழக்கூடிய அம்பர்கிரிஸ் என்பது தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்த 11 கிலோ 125 கிராம் எடை கொண்ட அம்பர்கிரிஸை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.11 கோடி ஆகும். மேலும், காரில் இருந்த திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள இருக்கன்துறையை சேர்ந்த மரிய தங்கம் மகன் ததேயூஸ் பெனிஸ்றோ (44), பெருமணலை சேர்ந்த அந்தோணி ராஜ் மகன் அருள் ஆல்வின் (40), செட்டிகுளம் சர்ச் தெருவை சேர்ந்த ரத்தினம் மகன் வேணுகோபால் (35) ஆகிய மூவரையும் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட அம்பர்கிரிஸை போலீஸார், திருச்செந்தூர் சரக வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, எங்கே கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர் என்பன போன்ற விபரங்கள் தொடர்பாக வனத்துறையினர் தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமிங்கில வாந்தி அல்லது அம்பர்கிரிஸ் (Ambergris), திமிங்கிலம் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள் ஆகும். இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும். திமிங்கிலமானது பீலிக் கணவாய் போன்ற உயிரினங்களை வேட்டையாடி உண்பது வழக்கம். அந்த பீலிக் கணவாயின் ஓட்டை திமிங்கலங்களின் செரிமான அமைப்பால் செரிக்க வைக்க முடியாது. அதனால் இந்த ஓடுகள் திமிங்கிலத்தின் குடலில் சிக்கிக்கொள்ளும்.
இந்த ஓட்டினால் திமிங்கிலத்தின் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த ஒட்டை சுற்றிய செரிமான அமைப்பிலிருந்து ஒரு சிறப்பு வகை திரவம் உற்பத்தியாகிறது. இதனை அம்பர்கிரிஸ் என்பர். இது நறுமணப் பொருட்கள் மற்றும் பாலியியல் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. அம்பெர்கிரிஸ் அரிதாகவே கிடைக்கிறது. எனவே, அதன் விலை மிக அதிகம். தங்கத்தின் விலையை விட அதன் விலை அதிகமாக இருப்பதால் இது கடல் தங்கம் அல்லது மிதக்கும் தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.