நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வரலாற்று ஆய்வாளர் திவான். இவர் 1954 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் செய்யது மசூது மற்றும் காசினம்மாள் பீவி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர் கல்லூரி மாணவராக இருக்கும் போது திராவிட இயக்க அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். மேலும் இவர் மறைக்கப்பட்ட, யாரும் அறியாத பல்வேறு வரலாறுகளை கண்டறிந்து ஆய்வு செய்து வெளி உலகிற்கு கொண்டு வந்துள்ளார். 68 வயதாகும் இவர் தற்போதும் புத்தங்கள் தொடர்ந்து எழுதி வருகிறார், தனது வீட்டையே நூலகமாக மாற்றி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரிய புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளார்.
புத்தகங்கள் மீது தீரா காதல் கொண்ட இவர் இதுவரை விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள் பங்கு, வ.உ.சியும் பாரதியும், திராவிட இயக்கம் வரலாற்றுக் குறிப்புகள், இந்து - முஸ்லீம் ஒற்றுமை என 150 புத்தகங்கள் எழுதியுள்ளார். வரலாறு, இலக்கியம், சுதந்திரப் போராட்டம், பக்தி இலக்கியம் என பலதுறைகளில் நூல்கள் எழுதி சாதனை படைத்துள்ளார். வரலாற்று நூல்கள் மட்டுமின்றி ஸ்டெர்லைட், கூடங்குளம் அணு உலை, சேது சமுத்திர திட்டம், கச்சத்தீவு உள்ளிட்ட சமகால மக்கள் பிரச்சனைகள் குறித்தும் நூல்களை எழுதியுள்ளார். மேலும் உமறுப்புலவர் விருது, தமிழ்மாமணி, தமிழ் அறிஞர், வரலாற்றுப் பேரறிஞர், காய்தேமில்லத், பெரியார், வரலாற்றியல் அறிஞர் உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
தொடர்ந்து இலக்கிய உலகில் சாதித்து வரும் வரலாற்று ஆய்வாளர் திவான் எழுதிய 150 நூல்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுடமையாக்கி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து திவான் கூறுகையில், நான் சிறுவயது முதலே திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவன். எனது திருமணமே முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் நடந்தது. திரவிட இயக்க தலைவர்கள் பற்றி அதாவது பட்டுக்கோட்டை அழகிரி சாமி, கேவிகே சாமி கட்டுரைகள், கேவிகே சாமி, அண்ணாவின் மறுபக்கம், அண்ணாவின் பொன்மொழிகள், திராவிட இயக்க வரலாற்று குறிப்புகள் என 10 க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளேன், அதே போல மத்திய கால இந்தியாவின் வரலாற்றில் துக்ளக், மாலிக்கபூர் போன்றோரை பற்றியும், பிரிட்டீஸ் ஆதிக்க காலத்தில் இந்திய சுதந்திர பெரும் போர் பற்றி 1072 பக்கம் எழுதியுள்ளேன். வ.உ.சி பற்றி மட்டும் 25 நூல்கள் எழுதியுள்ளேன். வ உசியின் உயிலை தேடி கண்டுபிடித்து தமிழ்நாட்டில் பதிப்பித்துள்ளேன்.
பாரதியை பற்றி 5 நூல்களும் எழுதியுள்ளேன், சுப்பிரமணிய சிவா, வீரபாண்டிய கட்டபொம்மன் என அனைத்து துறைகளையும் பற்றி எழுதியுள்ளேன். வரலாறு, இலக்கியம், பக்தி, என எல்லாத்துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளேன். இதுவரை 150 புத்தகங்கள் எழுதியுள்ளேன், அதில் 143 புத்தகங்கள் வெளிவந்துள்ளது. மீதமுள்ள புத்தகங்கள் விரைவில் வெளிவரும் என கூறினார். மேலும் அவர் கூறுகையில், நெல்லையில் மறைக்கப்பட்ட வரலாற்றை வெளியில் கொண்டுவர வேண்டும் என்பதே எனது நீண்ட கால ஆசை, அதனை நோக்கியே என் பயணம் இருக்கும். தற்போது எனக்கு தமிழக அரசு மிகப்பெரிய அங்கீகாரமாக எனது நூல்களை அரசுடமையாக்கியுள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கும், இந்த அரசுக்கும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்