தூத்துக்குடியில் சட்டவிரோதமாக 5 மாத குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த 3 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 




தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 5 மாத பெண் குழந்தையை சட்டவிரோதமாக விற்பனை செய்ய இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  உத்தரவின் பேரில் நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் திருச்செந்தூர் உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ரகு, தென்பாகம் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் ஆனந்த கிருஷ்ணகுமார், வடபாகம் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் செந்தில்குமார், திருமணி ராஜன் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் முத்துப்பாண்டி, வடபாகம் காவல் நிலைய காவலர் ஜான்சன் ஆகியோர் அடங்கிய தனிப்படைபோலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பாளையங்கோட்டை மெயின்ரோடு பகுதியில் உள்ள ஒரு கோவிலின் முன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் கையில் 5 மாத பெண் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.




விசாரணையில் தூத்துக்குடி டி.என்.எச்.பி காலனியை சேர்ந்த சித்திரைவேல் மகன் மாரியப்பன் (44), மேற்படி குழந்தையின் தாயான கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த கலைவாணர் என்பவரது மனைவி மாரீஸ்வரி (22), இவரது தாயார் சிவசங்கர் மனைவி அய்யம்மாள் (40) மற்றும் தூத்துக்குடி 3வது மைல் வி.க நகர் பகுதியை சேர்ந்த சங்கர் மனைவி சூரியம்மா (எ) சூரம்மா (75) ஆகியோர் என்பதும் இவர்கள் சட்டவிரோதமாக குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது.




உடனே போலீசார் மாரியப்பன், மாரீஸ்வரி, அய்யம்மாள் மற்றும் சூரியம்மா (எ) சூரம்மா ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து குழந்தையை மீட்டு தூத்துக்குடியிலுள்ள அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




குழந்தையை யாருக்கு விற்க முயற்சித்தனர், வாங்க முற்பட்டவர் யார் என பல்வேறு கோணங்களில் விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்