புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை சந்தை அமைக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ஆயத்த ஆடை உற்பத்தியில் திருப்பூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் இருந்து வருகிறது. ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட வானம் பார்த்த பூமியான புதியம்புத்தூரில் குடிசை தொழில் போல் எங்கு திரும்பினால் ஆயத்த ஆடை உற்பத்தி என்பது நடந்து வருகிறது. இங்கு சுமார் 300 ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. மேலும், ஆயத்த தயாரிப்புக்கு தேவையான மொத்த ஜவுளி கடைகள், பட்டன், நூல் கண்டுகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் அதிகம்.
இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளான ஓட்டப்பிடாரம், கீழமுடிமண், வேலாயுதபுரம், கொம்பாடி, கச்சேரிதளவாய்புரம், இராஜாவின்கோவில், தட்டப்பாறை, சில்லாநத்தம், துரைச்சாமிபுரம், சில்லாகுளம், பாஞ்சாலங்குறிச்சி, சிலோன்காலனி, இந்திரா நகர், குலசேகரநல்லூர், புதுப்பச்சேரி, ஜம்முலிங்காபுரம், சாமிநத்தம், புதுக்கோட்டை, கோரம்பள்ளம் என 40-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 15 ஆயிரம் குடும்பங்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆயத்த ஆடை உற்பத்தியில் ஈடுபட்டு வரும் புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை பூங்கா அமைக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தையல் பயிற்சி பள்ளி, ஆயத்த ஆடை உற்பத்திக்கு மானியத்தில் மின்சாரம், சில்லாநத்தம் கிராமத்தில் ரயில் நிலையம் என்பன போன்ற கோரிக்கைகளும் நிறைப்படாமல் உள்ளன.
இதுகுறித்து புதியம்புத்தூர் ரெடிமேட் உற்பத்தியாளர்கள் மற்றும் ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் ஜெகதீசன் கூறும்போது, சூரத்தில் இருந்து மொத்தமாக துணிகளை கொள்முதல் செய்கிறோம். அவசர தேவைகளுக்கு மட்டுமே சென்னை, மதுரை, பெங்களூரூ போன்ற நகரங்களில் துணிகள் வாங்குகிறோம். இதனால் மாதம் முழுவதும் சூரத் செல்வது, வருவது என எப்போது நாங்கள் ரயில் பயணத்தில் தொடர்புடன் தான் இருப்போம். தூத்துக்குடியில் இருந்து அருப்புகோட்டை இருப்பு பாதை வழித்தடத்தில் சில்லாநத்தத்தில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம்.
மேலும், ஆயத்த ஆடை பூங்கா என்பதை ஆயத்த ஆடை சந்தையாக மாற்றித் தரும்படி ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கான பணிகள் துரிதமான நடந்து வருவதாக அவரும் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் வாரந்தோறும் சந்தை கூடுவது வழக்கம். அதே போல், இங்கு சுமார் 300 கடைகள் வரை கட்டி சந்தை அமைத்தால் உற்பத்தியாளர்களுக்கும், வெளியூர்களை சேர்ந்த வியாபாரிகளுக்கும் விற்பனை மற்றும் கொள்முதல் செய்வது எளிதாக இருக்கும் என்றார்.
ஆயத்த ஆடைகளில் தற்போது ஆரி வேலைப்பாடுகள் என்ற ஆடை அலங்காரப்பணிகள் அதிகமாக நடந்து வருகிறது. ஆரி வேலைப்பாடுகள் என்பது நூல் கோக்காமல் ஊசி மூலம் நூல் எடுத்துச் செய்வது தான். தற்போது நவீன காலத்துக்கு ஏற்ப அனைத்து மாறி விட்டன. திருமணம், திருவிழாக்களில் பங்கேற்க பெண்கள் அதிகம் தேர்வு செய்வது ஆரி வேலைப்பாடுகள் கொண்டு ஆடைகளை தான். பட்டுப் புடவை, காட்டன் புடவை மற்றும் சுடிதாரில் அவற்றின் நிறம், டிசைனுக்கு ஏற்ப ஆரி வேலைப்பாடுகள் செய்ய ரூ.1300 முதல் ரூ.50,000 வரை வாங்குகிறோம். இந்த ஆரி வேலைப்பாடுகளுக்கு இங்கு தொழிலாளர்கள் இல்லாததால் மேற்கு வங்க மாநில தொழிலாளர்களை கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறேன். இங்கு ஆயத்த ஆடை சந்தை அமைக்க வேண்டும். மின்சார மானியம் வழங்கினால், ஆயத்த ஆடை தொழில் அடுத்தக்கட்டத்துக்கு செல்லும். வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் என்கின்றனர் ஆரி வேலைப்பாடு செய்து வரும் தொழிலாளர்கள்.