அரசு பேருந்துகள் மீது அபராதம்:


நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து தூத்துக்குடிக்கு பயணித்த காவலர் ஒருவர் பேருந்தில்  பயண சீட்டு எடுக்காமல் பயணித்ததாக அந்தப் பேருந்து நடத்துனர் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்பத்தியது. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஓட்டுநர்கள் மீது விதிமீறல்கள் தொடர்பான நடவடிக்கைகள், அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. 


இந்த நிலையில், இன்று வள்ளியூரில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்  திருநெல்வேலியிருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற மூன்று அரசு பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியவில்லை, போக்குவரத்து விதியை சரியாக கடைபிடிக்கவில்லை, சீருடை சரியாக அணியவில்லை என்று கூறி ஒவ்வொரு பேருந்து ஓட்டுனருக்கும் தலா 500 ரூபாய் அபராதம் விதித்து அதற்கான ரசீதை ஓட்டுநர்களிடம் கொடுத்து அனுப்பினார்.


நாங்குநேரி சம்பவம்:


கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி, நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு அரசு பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்து நாங்குநேரி நீதிமன்றம் முன்பு உள்ள நிறுத்தத்தில் நின்ற போது அங்கு நின்ற ஒரு காவலர் பஸ்ஸில் ஏறி உள்ளார். இதனை அடுத்து நடத்துனர் அந்த காவலரிடம் டிக்கெட் கேட்டபோது அந்த காவலர் அரசு பேருந்தில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான் எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


இதனைத் தொடர்ந்து நடத்துனர் அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும் இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் என கூறியதை தொடர்ந்து அவர் எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள். போக்குவரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவசம், நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான் எங்களையும் இலவசமாக நீங்கள் பயணிக்க விட வேண்டும் என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது குறிப்பிடத்தக்கது.


இருசக்கர வாகனத்தில் சென்ற பணிமனை ஓட்டுநருக்கு அபராதம்:


இதே போல நம்பியாவின்விளையில் சோதனை ஈடுபட்டு இருந்து கொண்டிருந்த அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரர் பகுதியை சேர்ந்த மரிய இந்திரன் வந்துள்ளார். இவர் வள்ளியூர் பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பணி நிமித்தமாக சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி, அவருக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்து வீடியோவாக பதிவு செய்து போலீசார் சமூக தளங்களில் பதிவு செய்துள்ளனர்.


தொடர்ச்சியாக காவலர்களுக்கும்,  அரசு போக்குவரத்து ஓட்டுநர், நடத்துனருக்கும் இடையான பணிபோர் முற்றி வருகிறது. நாங்குநேரியில் நடந்த சம்பவத்தின் எதிரொலியாக தற்போது நடக்கும் இந்த சம்பவங்கள் போக்குவரத்து துறைக்கும், காவல்துறைக்குமான மோதலாக பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது.