நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அடுத்த வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் ராஜா. இவர் கடந்த 20ம் தேதி நெல்லை மாநகர எல்லையான கே டி சி நகரில் உள்ள தனியார் உணவகம் முன்பு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொலை தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அதன் அடிப்படையிலும் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில்  6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில் முக்கிய நபர்களாக ஐந்து பேர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ஸ்ரீவைகுண்டம் ஐயப்பன், முன்னீர்பள்ளம் ஐயப்பன், வல்லநாடு தம்பான், மேலநத்தம் முத்து சரவணன் ஆகிய 4 பேரை மட்டும் கைது செய்த போலீசார் நள்ளிரவில் நெல்லை முதலாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர். மேலும் விசாரணையில் இருக்கும் கூலிப்படையை சேர்ந்த நவீனிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த கொலை சம்பவத்தில் 15 பேர் வரை ஈடுபட்டுள்ளனர் என்றும் கொலை செய்தது ஆறு பேர் மட்டுமே என்ற அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய முருகன், சுரேஷ் என மேலும் 10 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.




போலீசார் கைது செய்துள்ள வல்லநாடு தம்பான் மீது ஒரு கொலை வழக்கும், மேலநத்தம் முத்து சரவணன் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட இரண்டு வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் ஐயப்பன் மீது நெல்லையில் ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட இரு வழக்குகளும், முன்னீர்பள்ளம் ஐயப்பன் மீது ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட 5 வழக்குகளும் உள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தீபக்ராஜா கொலையில் Ipc 302 கொலை வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது (SC/ST act)  வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தலைமறைவாக இருக்கும் மேலும் சில நபர்களை கைது செய்த பிறகு தீபக் ராஜா கொலையின் பின்னணி குறித்து முழுமையாக தெரிய வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தீபக் ராஜாவின் உடலை வாங்க மறுத்து நான்காவது நாளாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.