நெல்லை மாவட்டம் பாலாமடை அருகே உள்ளது இந்திரா நகர். இப்பகுதியைச் சேர்ந்த 25 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கிவைத்துள்ளதாகவும், அந்த குடும்பங்களை சேர்ந்த நபர்களை தெருக்களில் தண்ணீர் குடிக்க கூடாது, கடைகளில் பொருட்கள் வாங்க கூடாது என்றும் ஒதுக்கி வைக்கப்பட்ட நபர்களுடன் ஊர் மக்கள் யாரும் பேசக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடந்த ஓராண்டாக பல்வேறு தரப்பினரிடமும் மனு அளித்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டமும் நடத்தியுள்ளனர். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எந்த விதமான நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், புகார் அளித்து ஓராண்டாகியும் எந்த நடவடிக்கை எடுக்காததை எடுத்துரைக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். குறிப்பாக லட்டு வழங்கும் போராட்டம் நடத்துவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட நபர்கள் ராமையன்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர் மாரியப்பாண்டியன் தலைமையில் வந்தனர்.
அப்போது ரேஷன் அட்டையுடன் வந்த அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நபர்களுக்கு லட்டு வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழலில் மாவட்ட ஆட்சியருக்கு லட்டு வழங்கி கண்டனத்தை பதிவு செய்ய லட்டுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த நபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் இருதரப்புகிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சூழலில் அனுமதி இன்றி போராட்டம் நடத்திய காரணத்திற்காகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நபர்களுக்கு இடையூறு செய்ததாகவும் கூறி லட்டு வழங்கி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய போலீசார் முற்பட்டனர். அப்போது லட்டு வழங்கும் போராட்டத்தை முன்னெடுத்து வந்த ராமையன்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர் மாரியப்பப்பாண்டியன் போலீசாரை கண்டதும் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து அவருடன் மாவட்ட ஆட்சியருக்கு லட்டு கொடுக்க வந்தவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கைது செய்த நபர்களை பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்