நெல்லை மாவட்ட காவல்துறையில் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் பல்வீர் சிங். இவர் ஏஎஸ்பியாக பொறுப்பேற்ற பிறகு அம்பாசமுத்திரம் பகுதியில் சின்ன குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களின் பற்களை பிடுங்கியும், வாயில் ஜல்லி கற்களை போட்டும் கொடூரமான தண்டனை வழங்கி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி போன்ற காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களின் பற்களை பிடுங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா என்ற நபரை அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராவை உடைத்து பிரச்சனையை செய்ததன் காரணமாக ஏஎஸ்பி பல்வீர் சிங், சூர்யவை அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து பற்களை துடிதுடிக்க பிடுங்கி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் தற்போது சிறிய பிரச்சனை செய்ததாக கூறி அவர்களது பற்களையும் உடைத்து தற்போது அந்த மூன்று பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில இளைஞர்களின் பற்களை உடைத்து அவர்களது வாயில் ஜல்லிகற்களை போட்டு கொடுமைப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் கூறும்போது, "ஒரு சின்ன வழக்குக்காக அம்பாசமுத்திரம் போலீசார் எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது ஏஎஸ்பி சார் கையில் கையுறை அணிந்து கொண்டும், டிராக் பேண்ட் அணிந்து கொண்டும் அங்கு வந்தார். எங்கள் வாய்க்குள் ஜல்லிக்கற்களை போட்டு கொடூரமாக அடித்தார். மேலும் கற்களை வைத்து பல்லை உடைத்தார். எனது அண்ணன் மாரியப்பனுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. அவரது ஆண் உறுப்பை நசுக்கி கொடுமைப்படுத்தினார். அவன் தற்போது படுத்த படுக்கையாக உணவு சாப்பிட முடியாமல் தவித்து வருகிறான். எங்களுக்கு நடந்ததை போன்று வேறு யாருக்கும் நடக்கக்கூடாது” என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். மேலும் விசாரணை அதிகாரியாக சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலம் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணையை துவக்கினார். அப்போது புகார்தாரர்கள் வர வாய்ப்பில்லாத நிலையில் உள்ளதாக கூறியுள்ள நிலையில் மேலும் அவர்களுக்கு உகந்த நாளில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதே போல் கல்லிடை குறிச்சி காவல் நிலைய காவல்துறையிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும், காவல் நிலைய கண்காணிப்பு கேமிரா காட்சிகள் கோரப்பட்டுள்ளதாகவும் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகம்மது சபீர் ஆலம் தகவல் தெரிவித்தார்.
இந்த நிலையில் மாலை 6.30 மணிக்கு மேல் லட்சுமி சங்கர் என்பவர் மட்டும் காவல்துறை பாதுகாப்புடன் முககவசம் அணிந்து விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். ஒரு மணி நேரத்திற்கும் மேல் அவரிடம் விசாரணையானது நடைபெற்றது, விசாரணையின் போது காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஒருவரும் உடன் இருந்தார். குறிப்பாக காவல்துறையினர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் பின் அவர்களே அழைத்து சென்றனர். இதனால் காவல்துறையினர் அழைத்து வந்த அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் ஏஎஸ்பி தாக்குதலில் தான் காயம் அடையவில்லை என்றும் அவர் தவறிழைக்கவில்லை எனவும் விளக்கம் அளித்ததாக தெரிகிறது. குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் முன்னிலையிலேயே இந்த விசாரணை நடைபெற்றதால் முறையான விசாரணை நடத்தப்படவில்லை எனவும் பல்வேறு அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தற்போது நடத்தப்படும் இந்த விசாரணையானது காவல்துறை அதிகாரி மீது உள்ள குற்றச்சாட்டை சரிசெய்யும் வகையில் நடைபெறுகிறது. காவல்துறை முன்னிலையில் நடைபெறும் இந்த விசாரணை முறைப்படி நடக்கவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், முறைப்படி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கைகளும் வலுத்துள்ளது.
முன்னதாக பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கை கட்டாய காத்திருப்பர் பட்டியலுக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை அதிகாரி விரைவில் விசாரணை நடத்துவார் எனவும் கூறப்படுகிறது..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..