தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் அங்குள்ள பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்துகொண்டு பொதுக் கூட்டத்தில் பேசினார். பொதுக்கூட்டம் முடித்த பிறகு ஆர்.எஸ் பாரதி காரில் ஏறி புறப்பட்டார். அப்போது நெல்லை - தென்காசி சாலையில் வெள்ளை நிற காரில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் சென்றனர். அவர்கள் சாலையோரம் திமுகவின் கொடிகள் மற்றும் கூட்டத்தை கண்டதும் பாரத் மாதா கி ஜெய் என கோசமிட்டவாறு காரில் சென்றனர். அப்பொழுது சாலையில் கூட்டம் முடிந்து கிளம்பிக் கொண்டிருந்த திமுகவினர் பாரத் மாதா கி ஜெய் என கோசமிட்டு சென்ற காரை மறித்து எவ்வாறு திமுக கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து பாரத் மாதா கி ஜெய் என கூறுவாய் என காருக்குள் இருந்த நபர்களை 30க்கும் மேற்பட்ட திமுகவினர் சுற்றி வளைத்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழல் உருவானதோடு திமுகவினர் காரில் இருந்த நபர்களை வெளியே இருந்து அடித்து உதைத்தனர். மேலும் காரை எட்டி உதைத்தும், கண்ணாடியை உடைத்தும் பயங்கர தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுக்க முயன்றும் ஆக்ரோசத்துடன் திமுகவினர் அந்தக் காரில் இருந்தவர்களையும் காரையும் தொடர்ந்து தாக்கி கொண்டிருந்தனர். தாக்குதல் சம்பவம் நடந்த இடத்தில் கூடுதல் போலீசார் வந்து காரில் இருந்தவர்களை அங்கிருந்து புறப்படுமாறு அறிவுறுத்தியதோடு திமுகவினரையும் தடுத்து நிறுத்த முற்பட்டனர். பின்னர் ஒரு வழியாக காரை போலீசார் சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்தி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் பாவூர்சத்திரத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து காரில் சென்ற நபர்கள் யார்? எதற்காக அங்கு வந்து கோசமிட்டனர் என காவல்துறையினர் விசாரித்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையிலிருந்து தென்காசியில் உள்ள குற்றால அருவிக்கு குளிக்க சென்ற நபர்கள் என்றும், அவர்கள் கூட்டம் நடந்த பகுதி அருகே வந்ததும் பாரத் மாதா கி ஜெய் என கோசமிட்டதும் தெரியவந்தது. பாவூர்சத்திரத்தில் திமுக பொதுக்கூட்டம் முடிந்து கலைந்து செல்லும் வழியில் காரில் வந்த நபர்கள் திடீரென பாரத் மாதா கி ஜெய் என கோசமிட்டதாலும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் காரை வழிமறித்து காரில் இருந்தவர்களை அடித்து உதைத்ததோடு கார் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் தீவிர விசாரண நடத்தி வருகின்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்